மலையக மக்களின் மேம்பாட்டுக்காக உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் திருத்தம்

இலங்கையில் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

மலையகத்தில் சமூகப் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியுள்ளது

இதையடுத்து இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு பிரதேச சபைகள் மூலம் சேவைகளை வழங்க வழி ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாறுதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தின் மூலம், பெருந்தோட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை அதன் உரிமையாளர்களின் அனுமதியுடனேயே செய்ய வழி செய்திருந்தது.

பிரதேச சபைகளில் வளங்களை தோட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது எனும் நிலையும் இருந்தது.

இதன் காரணமாக சிறிய பணிகளைக் கூட பெருந்தோட்டங்களில் முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இப்போது அப்படியான தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் பெருந்தோட்டங்களில் பிரதேச சபைகள் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

மலையகப் பகுதியிலுள்ள கழிப்பறை ஒன்று

அமைச்சரவையில் முடிவை அடுத்து சிறுபாதைகள், நீர் விநியோகம், கழிப்பறைகள் போன்ற வசதிகளை இனி பிரதேச சபைகள் பெருந்தோட்டப் பகுதிகளில் செய்துதர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசின் இந்த முன்னெடுப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான மூ சிவலிங்கம்

இதுவரை காலமும் உள்ளூராட்சி சபைகள் தோட்டங்களில் தமது பணிகளை முன்னெடுக்காததால் தோட்டப்புறத்தில் வசதிகள் முடங்கிப் போயிருந்தன என்றும் அவர் கூறுகிறார். -BBC

TAGS: