ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனையின் எதிரொலி: வட கொரியா மீது பொருளாதார தடை?

northkorea_punish_001ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி அணு குண்டை விட அதி பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக வடகொரியா பரிசோதித்தது.

இது குறித்து அந்நாட்டு தொலைக் காட்சியில் வெளியான செய்தியில், “வடகொரியா ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக நடத்தி விட்டது.

இதன் மூலம் அணுசக்தியில் வடகொரியா அடுத்தக்கட்டத்துக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே இதை பயன்படுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

வடகொரியாவின் இந்த பரிசோதனை உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், வடகொரிய விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நியூயோர்க் நகரில் அவசரமாக கூட்டப்பட்டது.

மூடிய அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஹைட்ரஜன் குண்டு வெடித்த வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://world.lankasri.com