தமிழ் அகதிகளுடன் இலங்கை அதிபர் சந்திப்பு! அரசியல் நாடகமா?

maithiri_jaffna_visit_002அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வேறொரு நிகழ்விற்காக வந்திருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருபத்தைந்து வருடங்களாக அகதிகளாக உள்ள வலி வடக்கு அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள ஈழ அகதிகளுடன் பேசினார்.

இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களை இறங்கி வந்து சந்தித்த மைத்திரிபாலவே என்று ஊடகங்கள் அவரைப் புகழ்ந்தன.

அகதி முகாமுக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன அங்குள்ள மக்களுடன் உரையாடியதோடு, அவர்களின் குடிசைக்குள் நுழைந்து சமையலறை வரை சென்று அவர்களின் நிலவரங்களைப் பார்த்தார். குழந்தைகளுடனும், இளைஞர்களுடனும் உரையாடினார்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவினால் வலி வடக்கு அகதிகள் திரும்பிப் பார்க்கப்படாத சூழ்நிலையில், மைத்திரிபாலவின் அகதி முகாமின் வருகை அகதி மக்களுக்கும் ஊடகங்களுக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

வலி வடக்கு என்பது ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள வளமான செல்வம் கொழிக்கும் பூமி. அங்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் 34 அகதி முகாமகளில் வசித்து வருகிறார்கள். வலி வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் வரையில் தற்போது அகதிகளாக உள்ளனர்.

இந்த மக்கள் வசிக்கும் அகதி முகாம்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கூரைகள் மக்கி ஒழுகுகின்றன. வேலை இல்லை. தங்கள் சொந்த ஊரில் எப்படியெல்லாம் வாழ்ந்த மக்கள் வாழ்வாதாரமின்றி அகதிகள் என்ற அடையாளத்துடன் இருபத்தைந்து ஆண்டுகளாக தங்கள் ஊருக்குச் செல்ல தவமிருக்கிறார்கள்.

இந்த மக்களின் நிலங்கள் உள்ள வலி வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக அடையாளங்கள் நிறைந்த பகுதி. அந்தப் பகுதியில் இப்போது முழுக்க முழுக்க சிங்கள இராணுவத்தினரின் படைமுகாம்களும், இராணுவ விடுதிகளுமே உள்ளன.சுற்றுலா வரும் சிங்கள மக்கள் தங்கும் உல்லாச விடுதிகளும், அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், ஆலயங்கள், வீடுகள் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு இவைகளையே அங்கு சிங்கள இராணுவத்தினர் கட்டி எழுப்பி வருகின்றனர்.

ஈழத்தில் பாரம்பரியமிக்க நடராஜா கல்லூரியை அழித்து, அங்கு பெரும் இராணுவ உல்லாச விடுதி அமைக்கப்பட்டள்ளது. நிலத்திற்குச் சொந்தமான மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அவல வாழ்வு வாழ, அந்த மக்களின் நிலங்களில் இதைத்தான் சிங்கள இராணுவம் கட்டியெழுப்பியிருக்கிறது.

உலகில் பள்ளிக்கூடங்களை அழித்து உல்லாச விடுதிகளைக் கட்டியெழுப்பிய பெருமையும் சிங்கள இராணுவத்தையே சாரும்.

இந்த விடயங்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தாலும், இன்னமும் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இயங்கியதைப் போன்றே இருக்கின்றன. மைத்திரிபால, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவியேற்ற பின்னர், வெறும் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை விடுவித்தபோதும் இன்னனமும் நாலாயிரம் ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்க இருக்கிறது.

இந்த பிரதேசத்தை விடுவிக்க புதிய அரசும் தயங்குகிறது. இலங்கையின் புதிய அரசு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு கொஞ்ச நிலப்பகுதிகளையும் சில அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்கிறது.

மீள் குடியேற்றம், தமிழ் இளைஞர் விடுதலை போன்ற விடயங்களையே செய்வதற்குத் தயங்கும் அரசு ஈழ இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தருமா? என்ற கேள்விகளை ஏற்படுத்துகிறது.

ஈழ மக்களின் காணிகளை விடுவித்தால் சிங்கள மக்கள் கோவிப்பார்கள் என்று புதிய அரசு கருதுகிறது. காணிகளை விடுத்து இராணுவ முகாம்களை அகற்றி வடக்கின் பாதுகாப்பு பலவீமடைந்துள்ளது என்று ராஜபக்சே சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யத் தொடங்கிவிடுவார். இதற்கு அஞ்சியே புதிய அரசு அப்பகுதிகளை விடுவிக்க தயங்குகிறது.

சர்வதேச அழுத்தங்களை குறைக்கவே ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போது அகதி முகாம்களில் மக்களின் அவல வாழ்வை நேரில் பார்த்த மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களில் மக்களுக்கு தீர்வு தருவதாக கூறியுள்ளார்.

ஆறு மாதங்கள் என்றாலும் சரி ஆறு நாட்கள் என்றாலும் சரி தமிழ் மக்களின் நிலத்தை அபகரித்து இராணுவ முகாம்களை எழுப்புவது பெரும் உரிமை மீறல் என்பதையும், அவர்களின் நிலம் அவர்களுக்கே உரிமையானது என்பதையும் சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்க துணியும்போதே வலி வடக்கு அகதிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

அவ்வாறான அணுகுமுறை வெளிப்படையாக மேற்கொள்ளும் ஒரு சூழல் ஏற்பட்டாலேயே இனப்பிரச்சினையை தீர்க்க இயலும். அத்தகைய நடவடிக்கையை மைத்திரிபால எடுப்பாரா? அல்லது இதுவும் ஓர் அரசியல் நடிப்பா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

தீபச்செல்வன்

-குமுதம்

TAGS: