புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியவில்லை!

senavi_ratne_ 2யாழ்ப்பாணத்திறக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மீன்படித்துறை அமைச்சர்  மகிந்த அமரவீர  யாழ் மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை கடற்றொழில் அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தற்போது மீன்பிடியாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாக,  யாழ் மாவட்ட மீன்பிடி அமைப்புக்களின் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக இந்திய மீனவா்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் அழிக்கப்படுதல், தென் பகுதி மீனவா்களின் அத்து மீறிய மீன்பிடி, மேலும் தற்போது பாரிய துறைமுகங்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளமை, துறைமுகங்கள் வான்தோன்டாமை உட்பட பல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் எடுத்துக் கூறப்பட்டது.

ஆனாலும் யாழ் மாவட்ட மீன்பிடி அமைப்புக்கள் ஒற்றுமையாக எதனையும் மனம் வைக்காது ஏட்டிக்குப் போட்டியான முறையில் சில கருத்துக்களைக் கூறியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் விவகார இராஐாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.

விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! மீனவசங்க பிரதிநிதிகள்

வடமாகாண கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் இந்திய இழுவை படகுகளை கைது செய்யுங்கள் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடற்படை மற்றும் பொலிஸாருக்கு உத்தரவுபிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், விடுதலை புலிகளுக்கு எதிராக போராட முடிந்தவர்களுக்கு இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியவில்லையா? எனவும், இந்திய மற்றும் வடமாகாண மீனவர்களை மோதவிட்டு அரசியல் இலாபம் தேட நினைக்கிறீர்களா? எனவும் மீனவ பிரதிநிதிகள்  கேள்வி எழுப்பினர்.

எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மீனவர் எல்லை தாண்டும் பிரச்சினை இன்று நேற்றல்ல பல வருட காலமாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அயல் நாடான இந்தியாவுடன் பகைத்துக் கொள்ளமுடியாது என கூறிய அவர் அதற்காக இந்திய இழுவை படகுகளை தடுக்காமல், வளத்தை அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

எனவே, இனி அத்துமீறும் இந்திய படகுகளை  கைது செய்யுமாறு உத்தரவிட்ட அவர் கைப்பற்றப்படும் படகுகள் மற்றும் வலைகள் என்பன மீள வழங்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

12 கிலோ மீற்றர் நீளமான கடற்பகுதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திலே உள்ளது! வலி,வடக்கு மீனவர்கள்

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து பலாலியின் சிறு பகுதி, வளலாய் ஆகிய இரு கரையோரப் பகுதிகளே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 12 கிலோ மீற்றர் நீளமான கடற்பகுதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளதாக வலி,வடக்கு மீனவர்கள் கடற்றொழில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய தினம் யாழ்.விஜயம் செய்துள்ள  கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் மீனவர்களை சந்தித்தபோதே அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், மிகப்பெரும் கடல்வளத்தை கொண்ட மயிலிட்டி துறைமுகம் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த துறைமுகம் வேறு வியாபார தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் நிலையில் மீனவர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் 12 கிலோ மீற்றர் கடற்பகுதி மற்றும் 4 பாரிய மீனவ கிராமங்கள் படையினர் வசம் உள்ளது, இந்த நிலையில் நாங்கள் 38 நலன்புரி முகாம்களில் வாழ்கிறோம், எங்களை எங்கள் நிலத்தில் குடியேற்றினால் 38 முகாம்கள் மூடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் மக்கள் சிலரும் மயிலிட்டி துறைமுகத்தை நாளை பார்வையிடவுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தாம் அழுத்தம் கொடுப்போம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: