13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்காது!

dilaanஅரசியலமைப்பு திருத்தப்படுகிற போதும் அதனூடாக 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இணங்காது என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தத்தினூடாக நாட்டின் ஜக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழான சுதந்திர கட்சி அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,சகல தரப்பினருடனும் பேசி உடன்பாட்டுடனே அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக நாடு துண்டாடப்படப் போவதாகவும், பொளத்த மதத்திற்கு இருக்கும் முன்னுரிமை நீக்கப்படப் போவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இவை எதுவும் கிடையாது. மக்களினதும் ,அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை பெற்றே யாப்பு திருத்தப்பட வேண்டும்.

13வது அரசியலமைப்பு எமது அரசியலமைப்பின் அங்கமாகும்.13வது திருத்தம் நாட்டின் இறைமைக்கு குந்தகமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர சு.க உடன்பாடாது.

அரசியலமைப்பை குட்டிச் சாத்தானாக காட்ட சிலர் முயல்கின்றனர். வெளிநாடுகளுக்கு தேவையானவாறு இதனை திருத்த மாட்டோம்.

சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் 1995ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்திற்கு முயற்சி செய்யப்பட்டது.

2000ம் ஆண்டில் நாம் முன்வைத்த யாப்பு திருத்தத்தை ஜ.தே.க தீ வைத்தது. அன்று இதனை சமர்ப்பித்த ஜீ.எல் பீரிஸ் இன்று வேறு விதமாக கருத்து முன்வைக்கிறார்.

அவர் தயாரித்த யாப்பில் ‘ஜக்கிய’ என்ற வசனம் இருந்ததா? அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன்.

-http://www.tamilwin.com

TAGS: