புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற விடயம் இடம்பெறுமா? அல்லது ஐக்கிய இலங்கை என்ற அடிப்படை முன்னெடுக்கப்படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும் தேர்தல் முறையை மாற்றியமைக்கவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலும் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு எந்த வடிவில் அமையப் போகின்றது என்பது தொடர்பில் காரசாரமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற விடயம் இடம்பெறுமா? அல்லது ஐக்கிய இலங்கை என்ற அடிப்படை முன்னெடுக்கப்படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
ஆனால் கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளும் ஒற்றையாட்சி முறைமையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல புதிய அரசியலமைப்பினால் இலங்கையில் பௌத்த தர்மத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதலிடமோ, ஒற்றையாட்சிக்கோ எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள அடிப்படைவாதிகளின் பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வளமான வாழ்க்கை மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கிலேயே நாம் அனைத்தையும் மேற்கொள்கின்றோம்.
தேசிய பிரச்சினை உட்பட நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரசியலமைப்பு திருத்தம் ஒற்றையாட்சிக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்றும் அரசியலமைப்பு திருத்தமானது பெளத்த சிங்கள கொள்கையை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலும் ஏனைய மத, இன உரிமைகளை பலப்படுத்தும் ரீதியிலும் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் எந்தவொரு சாத்தியமும் இல்லை. அதேபோல் சர்வதேச ஆலோசனைகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. குறிப்பாக அதிகாரப் பகிர்வு விடயத்தில் 13ம் திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்கப் போவதும் இல்லை எனவும் மிகவும் திட்டவட்டமான முறையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த எடுத்துக்கூறியுள்ளார்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் இவ்வாறு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் சில முக்கியமான விடயங்களை எடுத்தியம்பியுள்ளார்.
விசேடமாக புதிய அரசியலமைப்பு தேசியப் பிரச்சினைக்கு ஸ்திரமான தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாடு இன்று பாரிய நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. இதற்கு மூலகாரணம் நாட்டு மக்களின் கருத்துக்களையும் இணக்கப்பாடுகளையும் பெற்றுக் கொள்ளாது தமக்கு தேவையான விதத்தில் தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களேயாகும் எனவும் சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் நாட்டை பல வருடங்களுக்குப் பின் தள்ளிவிட்டது. தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் சந்தித்தார்கள். இன்று எவரும் தனிநாடு கேட்கவில்லை. தனித் தமிழீழ கோரிக்கையும் இன்று இல்லை. யுத்தம் முடிவடைந்ததோடு தனி நாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது.
பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஸ்திரமான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுமட்டுமன்றி நாட்டு மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரே இலங்கை உருவாக்கப்பட வேண்டும். நான் ஒரு இலங்கையன் என்றும் இது எனது நாடு என்றும் பெருமையாக கூறும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எடுத்துரைத்திருக்கிறார்.
உண்மையில் ஒற்றையாட்சி முறைமையில் அமைந்த அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையிலும் சமஷ்டி என்றாலே தென்னிலங்கை தலைவர்கள் அச்சத்தை வெளிக்காட்டி வருகின்ற சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மிக முக்கியமான மற்றும் யதார்த்தமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.
விசேடமாக தமிழ் பேசும் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளனர் என்றும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் எட்டப்படாத ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றனர் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமையானது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக தென்னிலங்கை அரசியல் தலைவர்களினால் பார்க்கப்பட வேண்டியுள்ளது.
எனவே பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டு அதனூடாக வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளினதும் கூற்றுக்களை அவதானிக்கின்ற போது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது.
காரணம், அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் பகிரப்பட மாட்டாது என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படப் போவதில்லை எனவும் அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் தமிழ் பேசும் மக்கள் இணைந்த வடக்கு, கிழக்கில் 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் செல்லும் அதிகாரப் பகிர்வையே கோரி நிற்கின்றனர் என்பது வெளிப்படையாகும்.
அப்படிப் பார்க்கும் போது ஒற்றையாட்சி முறைமையினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையை பூர்த்தி செய்ய முடியாது என்பது அப்பட்டமாக தெரிகிறது.
எனவே தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்காக அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே பொருத்தமாக அமையும்.
அதுமட்டுமன்றி, நாட்டின் ஏனைய மாகாண சபைகளை விடுத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கூடிய அதிகாரப் பகிர்வை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கரிசனை செலுத்த வேண்டும்.
இதுவரை காலமும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் அரசாங்கம் தூர நோக்குடன் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
நியாயமான அரசியல் தீர்வை முன்வைத்து நிரந்தர சமாதானத்தை அடைவதன் மூலமே இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அது மட்டுமன்றி, நல்லிணக்க செயற்பாடுகளிலும் வெற்றியை காணமுடியும்.
அதனைவிடுத்து ஒற்றையாட்சி என்ற சொற்பதத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் தீர்வுத் திட்டத்தை வழங்க முடியாமல் போகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான தற்போதைய இந்த தீர்க்கமான கட்டத்தில் அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் இணைந்து பொருத்தமான ஒரு தீர்வு முறைமைக்கு செல்ல வேண்டும்.
இந்த இடத்தில் தொடர்ந்து ஒற்றையாட்சி என்ற கடும்போக்கு வாதத்தில் இருந்தால் தற்போது கிடைத்திருக்கின்ற அருமையான சந்தர்ப்பத்தில் பலனைப் பெற முடியாமல் போய்விடும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே அரசாங்கம் இது தொடர்பில் ஆழமான முறையில் கவனம் செலுத்தி மக்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்கி நியாயமான அரசியல் தீர்வொன்றை காணும் நோக்கில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
-http://www.tamilwin.com