ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்க்கினா பாசோவில் உள்ள உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
பர்க்கினா பாசோவின் தலைநகரான Ouagadougou நகரில் ஸ்ப்லெண்டிட் என்ற நட்சத்திர ஹொட்டல் அமைந்துள்ளது.
இந்த ஹொட்டலில் வழக்கமாக ஐ.நா சபையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மேற்கத்திய தலைவர்கள் அடிக்கடி வருகை தருவார்கள்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த ஹொட்டலுக்குள் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய 3 தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்து அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொலிசார் தரப்பில் தற்போது கூறப்பட்ட செய்தியில், ஹொட்டலில் தாக்குதல் நடந்தபோது 100 முதல் 150 பேர் இருந்துள்ளனர்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 33 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
அதே சமயம், பொலிசார் நடத்திய பதிலடி தாக்குதலில் இதுவரை 63 பேரை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், எத்தனை நபர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற உறுதியான தகவல்கள் தெரியவரவில்லை.
இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும், எதனால் இந்த தாக்குதலை நடத்தினர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
நள்ளிரவு நேரத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து, Ouagadougou தலைநகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு:
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்க்கினா பாசோவில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர உணவு விடுதியில் நுழைந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு விடுதியின் முகப்பு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஒன்றில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைத்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் என்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும், உணவு விடுதிக்குள் இருந்து ஏராளமானோரை சிறைபிடித்து சென்றுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்தும் இதுவரை உரிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
வாகன நிறுத்தப்பகுதியில் வெடிகுண்டு வெடித்துள்ளதால் அப்பகுதியில் ஏராளமான கார்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த உணவு விடுதி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகாமை பகுதிகள் அனைத்தும் வெளிநாட்டினர் அதிகம் புழங்கும் இடம் என்பதால் அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
-http://world.lankasri.com































