கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை மேலும் நீடிக்குமாறு அந்த ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2013 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் காலம் 4 தடவைகள் நீடிக்கப்பட்டதுடன், யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணை அறிக்கையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாட்சி விசாரணைகள் பதிவு செய்யப்பட்டதுடன், இதுவரை சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
காணாமற்போன இராணுவத்தினர் தொடர்பில் 5,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-http://www.puthinamnews.com