பெஷாவர்: பாகிஸ்தானின் பச்சாகான் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியும், குண்டு வீசியும் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இந்த கோர தாக்குதலில் 70 மாணவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் சர்சத்தா நகரிலுள்ளது பச்சாகான் பல்கலைக்கழகம். இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வழக்கம்போல வந்திருந்தனர். பாட வேளை ஆரம்பித்த சில நிமிடங்களில் தீவிரவாத கும்பல் ஒன்று சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே ஓடிவந்தது. அந்த கும்பல் கண்ணில் பட்டோரையெல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. வெடிகுண்டுகளையும் வீசியது.
பல்கலைக்கழகத்திற்குள் இருந்த சுமார் 3 ஆயிரம் மாணவர்களும், ஆசிரியர்களும், ஊழியர்களும், பீதியால் அங்குமிங்கும் ஓடினர். இதற்குள்ளாக, அந்த வளாகமே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.
தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் பலைக்கழகத்தை சுற்றி வளைத்தனர். பெஷாவரில் இருந்து கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்பு படையினர் உதவியோடும், தானாகவும், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தப்பியோடி வெளியே வந்தனர்.
தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர், பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, அவர்கள் துடித்துக்கொண்டுள்ளனர்.
தப்பியோடிவந்த மாணவர்கள் கூறிய தகவல்படி, தீவிரவாதிகள், சுமார் 70 மாணவர்களையாவது நெற்றிப்பொட்டில் சுட்டு கொலை செய்துள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு படையினர் எதிர்த்தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகி்ஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இத்தாக்குதலை கண்டித்துள்ளார். இரு வாரங்கள் முன்பு, இந்தியாவில் பதன்கோட் விமானத்தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தினர். சரியான நேரத்தில் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததால், பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. இருப்பினும் 7 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்தனர். நுழைந்த 6 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதே பாணியில் பாகிஸ்தான் பல்கலை. மீது இன்று தாக்குதல் நடந்துள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பரில் பெஷாவர் நகரில் பள்ளியொன்றில் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் 6 பேர் குழந்தைகள் என்றும் பாராமல் சரமாரியாக சுட்டு 150 பேர் உயிரை குடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.