ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
இந்நிலையில் காபூலில் தொலைக்காட்சி ஊழியர்கள் பயணித்த பேருந்து ஒன்றை குறிவைத்து காரில் வந்த தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் ஊடகவியலாளர்கள் 7 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கடந்த காலங்களில் தலிபான் தீவிரவாதிகள் ஊடக நிறுவனங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகில் ரஷ்ய தூதரகம் மற்றும் சிறு தொலைவில் ஆப்கான் பாராளுமன்றம் ஆகியவை அமைந்துள்ளன.
இந்நிலையில் தங்கள் தூதரகத்தை குறிவைத்து இந்த் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் தலிபான் தீவிரவாதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com