மைத்திரியின் கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன: ஜஸ்மின் சூக்கா

maithiri_sooka_001இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனீவாவில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக செயற்படுவது குறித்து கரிசனை கொண்டிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்டம் குற்றம் சுமத்தியுள்ளது.

பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீட்டை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்தக்கருத்து தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்ட நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, இலங்கையின் வரலாற்றில் உள்ளக விசாரணைகள் தோல்விக்கண்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இந்த விடயத்தில் தலையிடவேண்டும். இதன்போது நீதியை நிலைநாட்டமுடியும் என்று சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்து தமக்கு அதிர்ச்சியை அளித்ததாக சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் படையினர் கடத்தல்களில் ஈடுபடுவதாக வெளியான குற்றச்சாட்டை ஜனாதிபதி மைத்திரிபால நிராகரித்திருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள சூக்கா, 2015ஆம் ஆண்டில் மாத்திரம் 15 ஆட்கடத்தல் சம்பவங்களுடன், ஏழு சித்திரவதை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் ‘சர்வதேசத்தின் தலையீட்டை’ அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்குவதாக ஜனாதிபதி சிறிசேன ஜெனீவாவில் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் விதத்தில் அவர் பிபிசியிடம் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் (ஐடிஜேபி) கூறியுள்ளது.

இலங்கையில் உள்ளூர் விசாரணை பொறிமுறைகள் நீண்டகாலமாக தோல்வியடைந்த வரலாறு உள்ள நிலையில், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி நடைமுறையில் நம்பிக்கை வைப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் ஸூக்கா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்படும் இராணுவ வீரர்களின் பெயர் விபரங்களை ஐநா வெளியிடவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதையும் ஸூக்காவின் அறிக்கை விமர்சித்துள்ளது.

கடத்தல்களும் சித்திரவதைகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களும் புதிய ஆட்சியின் கீழும் தொடர்வதாக வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதி சிறிசேன பிபிசியிடம் மறுத்திருந்தார்.

அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ‘விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து’ வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், 2015ம் ஆண்டில் நடந்த அவ்வாறான 20 சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாகவும் ஃபிரீடம் ஃப்ரம் டார்ச்சர் என்ற அமைப்பும் அவ்வாறான வேறு சில சம்பவங்களை பதிவு செய்துள்ளதாகவும் ஐடிஜேபி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை மறுத்துள்ள இலங்கை ஜனாதிபதியின் போக்கில் மாற்றம் வரும் என்று நம்புவதாகவும் யஸ்மின் ஸூக்கா கூறியுள்ளார்.

இதனிடையே, தனது ஆட்சியின் கீழ் கடத்தல்களும் சித்திரவதைகளும் நடக்கவில்லை என்ற மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சர் அமைப்பும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: