ஈழ மண்ணின் வீர தியாகத்தை மகாகாவியம் ஆக்குவேன்! வைரமுத்து

mullai_vairamuththuஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் மண்ணை நான்தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது.

முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு ஒரு உயிர்ப்பு வரும். முதல் முத்தம் பெறும்போது உயிருக்குள் பூப்பூக்கும். குழந்தைக்கு முதலில் இரத்தம் சொட்டும்போது தாயின் இதயம் துடிக்கும் துடிப்பு போன்றே இந்த மண்ணை நான் தொட்டபோது உணர்ந்தேன.

தமிழனின் விவசாய அறிவு மற்றும் மரபு தொழில் நுற்பங்கள் எல்லாம் மறைக்கப்பட்டமைக்குக் காரணம் வேறுநாட்டவரின் நுற்பங்களை திணிக்கப்பதற்கே என்றும் சுட்டிக்காட்டிய அவர்,

வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் போன்ற ஊர்களின் பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. அவை  சரித்திரத்தில் இடம் பெறும் குறிப்புக்களாகவே இந்த உலகம் உணர்ந்திருக்கிறது என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: