உறுதியான தீர்மானத்தை எடுங்கள்!

channel-4யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகரமான மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கம் இது தொடர்பில் நம்பிக்கை தரும் பதில்களை வழங்குவதாக இல்லை.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்கள் வழக்கறிஞர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள அரசாங்கம் உள்ளக விசாரணைப் பொறிமுறை ஊடாக யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள பிரேரணையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள போதிலும், அரசாங்கமானது வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவை அறிவிக்காமல் வந்தது.

இலங்கை இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ற வகையில் சர்வதேசம் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.

ஆனால் இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எதனையும் கூறாமல் நாடளாவிய ரீதியில் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளிலிருந்து நீதிபதிகளை கொண்டு வந்து உள்ளக விசாரணை நடத்தும் நோக்கம் எனக்கில்லை. அதற்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளக விசாரணை பொறிமுறை ஊடாக விசாரணைகளை நடத்த நான் இணக்கம் வெளியிட்டுள்ளேன். அது மட்டுமன்றி இந்த விசாரணைகள் எமது அரசியலமைப்புக்கு உட்பட்டவாறே முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் நாம் அடிப்படை வேலைத் திட்டங்களை மேற்கொண்டு செயற்பட்டு வருகிறோம். இவை 24 மணி நேரத்தில் செய்யக்கூடியவை அல்ல. ஆனால், நாம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எமது நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணை பொறிமுறை ஊடாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த நாட்டின் நீதித் துறையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இதற்கு எவரையும் இறக்குமதி செய்வதற்கு அவசியமில்லை. எமது நாட்டிலுள்ள இந்த பிரச்சினையை எமது நாட்டு மக்களே தீர்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்ளக அரசியலுக்கோ நாட்டை ஆட்சி செய்வதிலோ நிர்வகிப்பதிலோ சர்வதேச உதவி தேவையில்லை. அவற்றை செய்வதற்கான திறமையானவர்கள் எமது நாட்டில் உள்ளனர். எனவே இந்த செயற்பாட்டை எம்மால் முன்னெடுக்க முடியும். யாராவது தவறுகளை .இழைத்திருந்தால் அது தொடர்பில் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வாறான உள்ளக விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பது என்பது தொடர்பில் இதுவரை அரசாங்கம் தீர்மானிக்காத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு வெளிநாட்டு நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளமையானது இங்கு அவதானத்திற்குட்பட வேண்டிய விடயமாக உள்ளது.

அதாவது அரசாங்கம் இந்த உள்ளக விசாரணையை மேற்கொள்வது தொடர்பிலும் அதன் வடிவம் குறித்தும் தீர்மானிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளையும் நடத்தவுள்ளதாக கூறியிருந்தது.

அந்தவகையில் மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது.

ஆனால் தற்போது இவ்வாறான கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் முன்னெடுக்கப்படாத நிலையிலேயே வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதில்லையென ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

அப்படியாயின் அரசாங்கம் உள்ளக விசாரணை வடிவத்தை ஏற்கனவே தீர்மானித்து விட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு நீதிபதிகள் இல்லாமல் உள்நாட்டில் எந்த அடிப்படையில் இந்த விசாரணைப் பொறிமுறையை அரசாங்கம் முன்னெடுக்கப் போகின்றது என்பது குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதிலிருந்து வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் அரசாங்கம் திட்டவட்டமாக எதனையும் கூறாமல் இருந்தது. இது தொடர்பில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படுமென அரசாங்க தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இதேவேளை அண்மையில் சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு வைத்து வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணை செயற்பாட்டில் ஈடுபடுத்துவது தொடர்பில் தமக்கு சிக்கல் இல்லையென்றும் எனினும் வெளிநாட்டு நீதிபதிகளின் வகிபாகம் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பிலேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ஜனாதிபதியின் அறிவிப்பை பார்க்கும் போது இந்த உள்ளக விசாரணை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லையென்பது தெளிவாகின்றது.

அப்படியாயின் அரசாங்கம் கூறுகின்ற இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறையானது எவ்வாறு அமையும் என்றும் அதன் பங்குதாரர்கள் யார் என்றும் உறுதியாக தீர்மானித்து நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவேண்டும்.

அதாவது அரசாங்கத்தின் இந்தப் பொறிமுறைக் கட்டமைப்பானது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாத வகையில் விசாரணை பொறிமுறைகளை முன்னெடுப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி அரசாங்கமானது வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயம் உள்ளடக்கப்பட்ட பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது அதனை நிராகரிக்கின்றமை எந்தளவு தூரம் நியாயமானது என்பது புரியாமல் உள்ளது.

எவ்வாறு இருப்பினும் எந்த முறைமையிலாவது நம்பகரமான மற்றும் சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

உள்ளக அடிப்படையில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லாத தன்மை காணப்படுகின்றது.

அதனால்தான் சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர். இந்த விடயத்தை அரசாங்கம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது கூட காணாமல் போனவர்களில் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவகையில் உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும்.

இவ்வாறான சூழலில் சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றமை நியாயமானதாக காணப்படுகின்றது.

எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் விசாரணைப் பொறிமுறையைக் கையாண்டு அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இந்த விடயத்தில் உறுதியான முடிவுகளை எடுத்து நாட்டு மக்களுக்கு அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

-http://www.tamilwin.com

TAGS: