வாக்குறுதியை மறந்து விட வேண்டாம்!

maithiri_ranil_001யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையானது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பாரிய அவதானத்துக்கு உட்பட்டுள்ள விடயமாகியுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள சர்வதேச நாடுகளும் உள்நாட்டிலும் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இது தொடர்பில் பாரிய கவனம் செலுத்தியுள்ளதுடன் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன.

இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் அந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ள தருணத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த கருத்து தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கையும் வழிமொழிந்து ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்துள்ளது.

அவ்வாறான நிலையில் அரசாங்கமானது சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஒருபோதும் மீற முடியாது. ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை நாங்கள் வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும் போது பொதுநலவாய, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குரைஞர்கள், விசாரணையாளர்கள் பங்கேற்பதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு முரணான கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பதற்கு அப்பால் இலங்கை தானாக முன்வந்து வழிமொழிந்து ஏற்றுக்கொண்டு வாக்குறுதியளித்த தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்களே முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக கண்டிக்கின்றது. சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் ஒருபோதும் மீறமுடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

விசாரணைப் பொறிமுறை அத்தீர்மானத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த எதிர்ப்பானது நியாயமானதாகவே காணப்படுகின்றது. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து ஜனாதிபதி சிறிசேன பின்வாங்குகிறார் என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது இலங்கை அரசாங்கத்தினால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் இணை அனுசரணையும் வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதையடுத்தே சர்வதேச நாடுகள் இலங்கையை பாராட்டியதுடன் தமது முழுமையான ஆதரவையும் வழங்கியிருந்தன.

அத்துடன் அரசாங்கமும் பிரேரணை நிறைவேற்றப்படும் போதுகூட இந்த வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்துக்கு பாரிய எதிர்ப்பை வெளியிடவில்லை.

மாறாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுத்து இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கத் தரப்பில் வாக்குறுதியளிக்கப்பட்டது.

அத்துடன் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் முடிவடைந்ததன் பின்னர் இந்த வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் தொடர்பில் அவ்வப்போது இலங்கையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவது இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியிருந்தனர்.

மேலும் தற்போதைய நிலையில் உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைப்பது ஒரு பாரிய பிரச்சினை அல்ல என்றும் எனினும் எவ்வாறு அவர்களை இந்த செயற்பாட்டில் ஈடுபடுத்துவது என்பதே தற்போது சிந்திக்கப்படவேண்டிய விடயம் என்றும் அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

அவ்வாறு இந்த வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்தில் கடும்போக்குவாதத்தை வெளிக்காட்டாமல் இருந்த அரசாங்கம் தற்போது திடீரென இவ்வாறு சர்வதேசத்தின் பங்களிப்பு எக்காரணம் கொண்டும் பெறப்படமாட்டாது என்றும் எங்கள் பிரச்சினைகளை எங்களினாலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருப்பது பாரிய கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஒருபோதும் மீறமுடியாது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.

அரசாங்கம் தற்போது வெளியிடும் கருத்துக்களை பார்க்கும்போது எங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

சர்வதேச சமூகமும் இந்த விடயங்கள் குறித்து ஆழமாக மதிப்பிடும் நிலைமைகள் ஏற்படலாம். சர்வதேசத்துக்கு வாக்குறுதியை வழங்கிவிட்டு அதனை தற்போது செய்ய முடியாது என்று கூறுவது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.

குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலும் விசாரணை பொறிமுறை குறித்து அவர் மதிப்பீடுகளை செய்யவுள்ள நிலையிலும் அரசாங்கம் இவ்வாறு வெளியிட்டுள்ள கருத்துக்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை பொறிமுறையை உள்ளக நிபுணர்களைக்கொண்டு மட்டுமே முன்னெடுப்போம் என்று அரசாங்கம் கூறுவதில் நியாயம் இருக்கலாம்.

ஆனால் அதனை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்பார்களா என சிந்திக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத வகையில் விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதில் அர்த்தம் இல்லை என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்தி விசாரணை பொறிமுறையை தயாரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. கடந்தகாலங்களில் உள்நாட்டு பொறிமுறையைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டிலும் நீதி கிடைக்காமையின் காரணமாகவே மக்கள் சர்வதேச பங்களிப்பை எதிர்பார்க்கின்றனர்.

யுத்த காலத்திலிருந்து இதுவரை காணாமல் போனோர் தொடர்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்தவொரு முறைப்பாட்டுக்கும் உரிய தீர்வு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் முற்றுமுழுதான உள்நாட்டு நிபுணர்களுடனான பொறிமுறை மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

மேலும் திருகோணமலையில் இரகசிய வதை முகாம்கள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. எனவே இந்த விடயங்கள் அனைத்தும் சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை வலியுறுத்துவதாகவே பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை முன்னாள் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இந்த நீதி வழங்கும் செயற்பாட்டில் உரிய முறையில் நம்பகரமாக செயற்படவில்லை. இதன் காரணமாகவே மக்கள் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தினர்.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நம்பிக்கையை சீர்குலைத்து விடாமல் தேவையான நம்பகரமான மற்றும் சுயாதீனமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு விரிவான விசாரணை பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்த விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: