சர்வதேச ஆதரவுத் தளத்தை இழக்கிறதா தமிழர் தரப்பு?

ranil_maithri_sampanthan_001 (1)உள்நாட்டில் யார் எப்படி விமர்சித்தாலும், சர்வதேச ஆதரவையும் நம்பிக்கையையும் எமது அரசாங்கம் பெற்றிருக்கிறது.

சர்வதேச ஆதரவைப் பெற்ற ஒரு அரசாங்கம் இலங்கையில் ஆகக் குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகியிருக்கிறது என்பதை, இவ்வாறு தான் மிகப் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்குப் பின்னர், இலங்கை மீதான சர்வதேச ஆதரவுத் தளம் உடைந்து போயிருந்தது. அந்த நிலையை இப்போது மாற்றியிருக்கிறது தற்போதைய அரசாங்கம்.

கடந்த ஓராண்டு ஆட்சியில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் உள்நாட்டு மக்களைத் திருப்திப்படுத்துவதில் எந்தளவுக்கு வெற்றி கண்டிருக்கிறது என்பது விவாதத்துக்குரிய விடயமே என்றாலும், சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை மறுபேச்சின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சர்வதேச ஆதரவைப் பெற்ற ஒரு அரசாங்கத்துக்கு, பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு போல, எப்போதுமே கூடுதல் பலம் இருப்பது இயல்பு.

தற்போதைய அரசாங்கம் அத்தகையதொரு பலத்தைப் பெற்றிருப்பது, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பல முன்னேற்றங்களுக்குச் சாதகமான நிலை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இலங்கையை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச நாடுகள் மத்தியில் போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் கூட ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அபிவிருத்தி உதவிகள் வெளிநாடுகளிடம் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கே கிடைத்தன. அதற்கும் அதிகளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் வெறுத்துப் போய்த் தான், சீனாவிடம் சரணாகதி அடைந்திருந்தார் மஹிந்த ராஜபக்ச.

இலங்கை அரசாங்கம் கேட்ட கடனைக் கொடுத்தது, கேள்வி எதையும் கேட்கவில்லை. அதனால் தான், சீனாவிடம் அளவுக்கதிகமான நிதியை, கூடுதல் வட்டிக்கு வாங்கிக் குவித்தார் மஹிந்த.

சீனா தவிர்ந்த மற்றைய நாடுகளின் அபிவிருத்தி உதவிகளில் இருந்து விலகி நிற்கின்ற ஒரு நிலையே முன்னைய ஆட்சிக்காலத்தில் இருந்தது.

ஆனால் இப்போது, சீனாவுக்குப் போட்டியாக, அபிவிருத்தி மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதில், மேற்குலக நாடுகள் முண்டியடிக்கின்றன. இது ஆட்சிமாற்றம் ஏற்படுத்திய ஒரு விளைவு.

இலங்கையின் அரசியல் மற்றும் வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமன்றி, தமக்குச் சாதகமானதொரு அரசாங்கம் அமைந்துள்ளதும் கூட, மேற்குலகின் கருணைக்கு மற்றொரு காரணமாகும்.

43 ஆண்டுகளுக்குப் பின்னர், தமது நாட்டுக்கு வருமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அதிகாரபூர்வ அழைப்பை விடுத்திருக்கிறது ஜேர்மனி. அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த மாதம் பெர்லின் செல்லவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அதுபோல, கடந்த 20ம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் முடிவுக்கு வந்த உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டுக்கு முதல் முறையாக இலங்கை அழைக்கப்பட்டிருந்தது.

40 ஆண்டுகளாக இலங்கைக்கு விடுக்கப்படாத அழைப்பு இம்முறை விடுக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். இவையெல்லாம் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக எந்தளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கான சில அளவீடுகள்.

இதற்கும் அப்பால் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் மட்டத்தில் இலங்கையின் இராஜதந்திர அந்தஸ்து அதிகரித்திருக்கிறது.

இவையெல்லாம், இலங்கைக்கான வெளியுலக ஆதரவுத் தளம் பலமடைந்து வருவதை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. உள்நாட்டில் அரசாங்கம் பலமடைந்து வருகிறது என்பதையும் தான் எடுத்துக் காட்டுகிறது.

தமது ஆதரவைப் பெறாத ஒரு அரசாங்கத்தை வீழ்த்த சர்வதேச சமூகம் எந்தளவுக்கு முயற்சிகளை எடுக்குமோ, அதேபோன்று, சர்வதேச ஆதரவு பெற்ற ஒரு அரசாங்கத்தைக் காப்பாற்றவும் வலுப்படுத்தவும், அதே சர்வதேச சமூகம் அக்கறை எடுத்துக் கொள்ளும்.

இந்தக் கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச ஆதரவுத்தளம் வலுப்பெற்று வருவது, தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், சாதகமானதொன்றாக இருக்க முடியாது.

இது கடந்தகால அனுபவங்கள் தந்திருக்கின்ற பாடம். சர்வதேச ஆதரவுத்தளம் கொண்ட அரசாங்கங்கள் பதவியில் இருந்த காலகட்டங்களின் தமிழர் தரப்பின் கை சற்றுக் கீழ் இறங்கித் தான் இருந்தது.

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு சர்வதேச தலையீடுகள் தேவை என்று தமிழர் தரப்பு நீண்டகாலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறது.

சில சமயங்களில் அத்தகைய தலையீடுகள், மத்தியஸ்தத்துடன் பேச்சுக்கள், தீர்வு முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கிறது. ஆயினும் சரியான தீர்வு ஒன்றை எட்டும் முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.

தற்போதைய நிலையில் கூட, சர்வதேச தலையீடுகள், அழுத்தங்களின் உதவியின்றி, தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிட்டாது என்ற நம்பிக்கை தமிழர் தரப்பில் பெரும்பாலானோரிடம் இருக்கிறது.

இதற்குக் காரணம், சிங்களத் தலைமைகள் ஒருபோதும் நியாயமாக நடந்து கொள்ளாத கசப்பான பாடமும், நியாயமாக நடந்து கொள்ளப் போவதில்லை என்ற அச்சமும் தான்.

சர்வதேச தலையீடுகளின் மூலமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற கருத்து தமிழர் தரப்பிடம் வலுவாக இருக்கின்ற சூழலில், இலங்கை அரசாங்கம் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கின்ற கருத்து நிலை மாற்றம் சாதகமானதாக இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லை.

தமக்குச் சாதகமான ஒரு அரசாங்கம், தாம் எதிர்பார்க்கின்ற அல்லது தம்மால் குறை சொல்ல முடியாமல் செயற்படுகின்ற ஒரு அரசாங்கத்தின் மீது, எந்தவொரு நாடும் அளவுக்கு அதிகமான அழுத்தங்களைக் கொடுக்க முனையாது.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு வலியுறுத்துவது மட்டும், முக்கியமானதன்று.

இந்தியா போன்ற நாடுகள் இதனை 1980களின் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகின்றன. அதை இலங்கையின் எந்தவொரு அரசாங்கமும் கருத்தில் கொண்டதில்லை.

எனவே இவ்வாறான வலியுறுத்தல்களுக்கு அப்பால் அழுத்தங்களைக் கொடுத்துச் செயற்படக் கூடிய அல்லது பேரம் பேசக் கூடியதொரு சர்வதேச சூழல் இப்போது இல்லை.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தும் சர்வதேச சமூகம், எந்தளவுக்கு அதற்காக அழுத்தம் கொடுக்கும் என்று பார்க்க வேண்டும்.

சர்வதேச ஆதரவைப் பெற்றிருக்கும் அரசாங்கத்திடம், ஒரு குறிப்பிட்ட இடைவெளியைப் பேணிக் கொள்வதையே எல்லா நாடுகளும் எதிர்பார்க்கும்.

அப்படிப்பட்டதொரு பாதுகாப்பு நிலைக்குள் இலங்கை அரசாங்கம் சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகரித்து வரும் சர்வதேச ஆதரவு, தமிழர் தரப்புக்குச் சாதகமாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தினது செயற்பாடுகள் மாத்திரம் அத்தகைய சாதகமான நிலையை தமிழர் தரப்புக்கு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

அரசாங்கம் சர்வதேச அரங்கில் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முன்வந்திருக்கிறது. அது சர்வதேச ஆதரவை பலப்படுத்தியிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கையெழுத்திட மறுத்த பல சர்வதேச பிரகடனங்கள், கூட்டு உடன்பாடுகளில் கையெழுத்திட்டிருக்கிறது அல்லது கையெழுத்திட இணங்கியிருக்கிறது இப்போதைய அரசாங்கம்.

மோதல்களில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் சர்வதேச பிரகடனத்தில் அண்மையில் இலங்கை கையெழுத்திட்டிருக்கிறது. இதனை பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் வரவேற்றிருக்கின்றன.

அதுபோலவே, கண்ணிவெடிகளை தடை செய்யும் ஒட்டாவா உடன்பாட்டில் கையெழுத்திட இணக்கம் தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழித்து சர்வதேச தரநியமங்களுக்கேற்ற சட்டம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

இவ்வாறாக மஹிந்த அரசாங்கம் எங்கெங்கு தவறுகளை விட்டதோ, எங்கெங்கு ஓட்டைகள் இருந்தனவோ அவற்றையெல்லாம் கண்டுபிடித்து அடைத்து வருகிறது தற்போதைய அரசாங்கம்.

சர்வதேச சமூகம் சொல்லுகின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொள்கிறது. அதனை நிறைவேற்றுகிறதா இல்லையா என்பது வேறு பிரச்சினை.

உடனடிப் பிரச்சினைகளில் இருந்து இலங்கையை விடுவிக்க இந்த அணுகுமுறை துணைபுரிந்திருக்கிறது.

இந்த நெகிழ்வுத் தன்மையான அணுகுமுறையை சர்வதேச சமூகம் சாதகமானதாக உற்று நோக்குகிறது.

இப்படிப்பட்டதொரு சூழலில், சர்வதேச சமூகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுப்பது கடினமானது.

அதனால் தான் இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச சமூகத்தின் பிடியின் இறுக்கம் தளர்ந்து வருகின்றது. இந்த தளர்வு நிலை தமிழருக்கு சாதகமானதாக இருக்க முடியாது.

அதேவேளை, இத்தகைய தளர்வு நிலை குறித்து கேள்வி எழுப்பினால், இலங்கை அரசாங்கத்தைப் போன்ற தளர்வு நிலையை தமிழர் தரப்பில் இருந்து எந்தளவுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ற பதில் கேள்வியை சர்வதேச சமூகம் எழுப்பக் கூடும்.

பிரச்சினைகனைத் தீர்க்கும் விடயத்தில் எந்தளவுக்கு தமிழர் தரப்பு தம் விருப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. நல்லெண்ணத்தைக் காட்டியிருக்கிறது என்ற கேள்வியும் எழுப்பப்படக் கூடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டுமன்றி அதற்கு அப்பாலும், அத்தகைய நெகிழ்வுத் தன்மை சர்வதேச சமூகத்தினால் எதிர்பார்க்கப்படலாம்.

தமிழர் தரப்பு பாதிக்கப்பட்ட தரப்பு, நியாயம் மறுக்கப்பட்ட தரப்பு விட்டுக் கொடுக்க ஏதுமில்லை என்ற வாதங்கள் அத்தகைய சந்தர்ப்பத்தில் எடுபடுமா என்று தெரியவில்லை.

சர்வதேச சமூகத்தை கவருகின்ற செயற்பாடுகளில், தமிழர் தரப்பிடம் போதாமைகளும் பற்றாக்குறைகளும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகையதொரு நிலையில் இருந்து கொண்டு சர்வதேச சமூகத்தை தமிழர் தரப்புக்கு சார்பாக வளைப்பது சாத்தியமற்றதாகவே இருக்கலாம்.

சர்வதேச சமூகத்தை வளைப்பதற்கு உரிமைகளை விட்டுக் கொடுப்பது மட்டும் தான் ஒரே அணுகுமுறையாக இருக்க முடியாது.

இலங்கை அரசிடம் இருந்து நியாயமான தீர்வு ஒன்றை தமிழர் தரப்பு பெற முயற்சிக்கின்ற போது, அதற்கான புறச்சூழலை உருவாக்கிக் கொள்வதும் முக்கியம்.

இலங்கை அரசாங்கம் தேடிப்பிடித்த, மஹிந்தவின் காலத்து ஓட்டைகளைப் போலத் தமிழர் தரப்பும் தமது ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முனைய வேண்டும்.

அத்தகைய நிலையை தமிழர் தரப்பு எப்போது எட்டப் போகிறது?

ஹரிகரன்

-http://www.tamilwin.com

TAGS: