BN-இன் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்

அக்டோபர் 6 இல் நாடாளுமன்றம் தொழில் சட்டத்தில்  மாற்றங்கள் கொண்டுவர ஏற்றுக்கொண்ட மசோதாவை மீட்டுக்கொள்வதே சிறந்தது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் தன்மை கொண்ட இந்த மாற்றங்கள், தொழிலாளர்களை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஜடப்பொருட்களாக மாற்றி, அவர்களது உழைப்பை முதலாளிமார்களிடம் அடிமைப்படுத்திவிடும் என்கிறார் வழக்கறிஞரான ஆறுமுகம்.

இந்த மாற்றங்கள் வழி தொழிற்சாலை மற்றும் தோட்ட முதாலாளிகள் மூன்றாம் தர ஒப்பந்த குத்தகையாளர்களைக் கொண்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தலாம். இது காலனித்துவத்தில் இருந்த கங்காணி முறையைப் போன்றதாகும். ஊதியத்தை இடைத்தரகரிடம் கொடுத்து விடுவார்கள். அதன் வழி உழைப்பை வாங்கி விற்கும் தரகராக செயல்படுபவரே உழைப்பின் விலையை நிர்ணயம் செய்வார்.

இது நடைமுறையில் உள்ள முதலாளி-தொழிலாளி ஒப்பந்த நடைமுறையை சீரழிப்பதோடு, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கோரி போரடும் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமையை அகற்றுகிறது. இந்தச் சட்ட மாற்றங்கள் தொழில் சட்டமாக்கப்பட்டால், இவை தொழிலாளர்கள் ஒன்றிணைவதை தடுக்கும். தொழிற்சங்கம் உருவாகுவது தேவையற்றதாகிவிடும்.

இம்மாற்றங்கள் வழி தொழிற்சங்கங்கள் உடைப்படும், குறைந்த சம்பள கொள்கை வலுவாகும் என்கிறார் ஆறுமுகம். ஒட்டுமொத்தத்தில் இது ஏற்கெனவே வறுமையில் வாழும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்.