ரஷியப் பிரிவினைக்கு அடித்தளம் அமைத்தவர் லெனின்: புதின் காட்டம்

இனவாரியாக மாகாண எல்லைகளை வரையறுத்தன் மூலம், ரஷியப் பிரிவினைக்கு லெனின் அடித்தளம் அமைத்ததாக ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

சோவியத் யூனியன் அமையக் காரணமாக இருந்தவர் லெனின்.

அவரது கொள்கைகளில் வேறுபாடு கொண்டவராக தற்போதைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இருந்தாலும், லெனின் குறித்த வெளிப்படையான விமர்சனங்களை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், ஸ்டோவ்ரபோல் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் புதின் கூறியதாவது:

ரஷியாவின் கடைசி மன்னர், அவரது குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள், ஆயிரக்கணக்கான மத குருக்கள் ஆகியோரை லெனின் கொன்று குவித்தது மிகப் பெரிய தவறு. மேலும், இனவாரியாக மாகாண எல்லைகளை வரையறுத்தது அவர் செய்த மற்றொரு மிகப் பெரிய தவறாகும்.

அவ்வாறு செய்ததன்மூலம், ரஷிய ஒற்றுமைக்கு லெனின் “டைம் பாம்’ வெடிகுண்டை வைத்துச் சென்றார்.

தனித்து செல்லும் உரிமையையும் கொடுத்து, அதே நேரம் முரட்டுத் தனமான அணுகுமுறையைப் பின்பற்றி சோவியத் யூனியனில் நாடுகளை லெனின் இணைத்தார்.

இதன் காரணமாகவே சோவியத் யூனியன் சிதறுண்டது என்றார் புதின்.

அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டியது, ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்தது போன்ற காரணங்களுக்காக சோவியத் முன்னாள் அதிபர் ஸ்டாலின் மீது புதின் குறை கூறி வந்தாலும், இரண்டாம் உலகப் போரில் வெற்றியைத் தேடித் தந்ததற்காக ஸ்டாலினை மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com