அமைதிப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடக்கம்: ஐ.நா. அறிவிப்பு

சிரியா உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா. மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கும் என ஐ.நா. அறிவித்துள்ளது.

இதுகுறிதது சிரியாவுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் ஸ்டாஃபன் டி மிஸ்டுரா திங்கள்கிழமை கூறியதாவது:

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகள் சார்பில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்பதில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நாடுகளிடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. எனவே, திங்கள்கிழமை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த அந்த அமைதிப் பேச்சுவார்த்தை, வெள்ளிக்கிழமை தொடங்கும் என்றார் அவர்.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஜெனீவாவில் ஐ.நா. மேற்பார்வையில் பல்வேறு தரப்பினருக்கும் இடையே திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாருக்கு அழைப்பு விடுப்பது என்பதில், அமைதி முயற்சியை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சவூதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

-http://www.dinamani.com