“இறுதிப் போரில் 40,000 பேர் உயிரிழப்பு என்பது மாயை”

இலங்கையில் காணாமல் போனவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர், வெளிநாடொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் குறித்து ஆராயும் அரச குழுவின் தலைவர் கூறுகிறார்.

போருக்கு பிறகு படைகளிடம் சரணடைந்த பலரைக் காணவில்லை எனக் குற்றச்சாட்டுகள்

அப்படியானவர்களை, சம்பந்தபட்ட நாட்டுடன் பேசி அவர்களை இலங்கைக்கு கொண்டுவரும்முயற்சிகளை எடுப்பது தொடர்பில் ஆராயும்படி வெளிவிவகார அமைச்சுக்கு தாங்கள் அறிவித்துள்ளதாகவும் மேக்ஸெல் பரணகவின் அறிக்கை கூறுகிறது.

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், சானல் 4 தொலைக்காட்சி இலங்கையின் போர் தொடர்பில் புதிதாக வெளிளியிட்டுள்ள நிகழ்ச்சிக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிகட்ட போரில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என வைக்கப்படும் குற்றச்சாட்டில், எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் போனோரின் உறவுகள் பதிலுக்காக காத்துள்ளனர்

தனது ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகள் பல தரப்பினராலும் திரிபுப்படுத்தி பேசப்பட்டதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு அண்மையில் யாழ்ப்பாணத்தில் கூடியபோது, மேலும் 300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மேக்ஸ்வெல் பரணகம தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளுக்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயலாம் எனவும் தாங்கள் பரிந்துரை செய்துள்ளதை அந்த அறிக்கையில் அவர் நினைவூட்டியுள்ளார். -BBC

TAGS: