யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவான உள்ளக விசாரணைப் பொறிமுறையையே இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். எனினும் எந்தவகையிலும் சர்வதேசத்தின் தலையீடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்தேறியுள்ளன என்ற குற்றசாட்டை விசாரணைகளின் மூலம் கண்டறிய நாம் தாயாராக உள்ளோம்.
எமது அரசாங்கம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை விடாது. உண்மைகளை கண்டறிவதிலும் அதே சந்தர்ப்பத்தில் எமது இராணுவம் மீதான கறையை நீக்குவதிலும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் செயற்படும்.
அவ்வாறாக இருந்தாலும் இந்த விசாரணைகள் முழுமையாக உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமையவே நடைபெறும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர்.
நாட்டை சர்வதேச தரப்பிடம் விற்கவோ அல்லது எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படவோ நாம் தயாராக இல்லை. எனினும் இந்த விசாரணைகளின் மூலமாக சர்வதேச தரப்பை திருப்திப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.
அதேபோல் கடந்த காலத்தில் இலங்கை தொடர்பில் சர்வதேச தரப்பினர் இருந்த நிலையில் இருந்து இப்போது மாறியுள்ளனர். அதற்கு எமது சர்வதேச ஒத்துழைப்பும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்த வாக்குறுதியுமே ஆகும்.
இப்போது இலங்கையின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச கண்காணிப்புகள் மற்றும் அவர்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதில் நாம் தயாராக உள்ளோம். அத்தோடு சர்வதேசத்தின் சட்ட உதவிகளை பெறுவதாயின் எவ்வாறான வகையில் அவற்றை கையாள்வது என்பது தொடர்பிலும் நாம் ஆராய தயாராகவே உள்ளோம்.
ஆனாலும் இலங்கையின் சட்ட வரைபுகள் இவ்வாறான உண்மைகளை கண்டறியும் செயற்பாட்டிற்கு பூரணமாக போதுமானதாக அமையும் என்பதே எமது நிலைபாடாகும். எமது நாட்டிலும் நிபுணத்துவம் வாய்ந்த அதேபோல் அனுபவம் மிக்க சட்டவறிஞர்கள் உள்ளனர். அவர்களை எம்மால் பயன்படுத்த முடியும்.
ஆகவே சர்வதேச ஆலோசனைகளுடன் அவர்களின் கண்காணிப்பிலான உள்ளக விசாரணையே நடைபெறும். ஆனால் இது சர்வதேச தலையீடு அல்ல. இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.
கேள்வி:- காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனோர் மிகவும் குறைந்த பட்ச எண்ணிக்கையென கூறுகின்றது. இது தொடர்பில்?
பதில்:- காணமல் போனோர் எண்ணிக்கை என்ன என்பது தொடர்பில் எமக்கும் தெரியாது. ஆனால் அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் கண்டறியப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். காணாமல்போனோர் தொடர்பில் கண்டறிய நாம் சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
கேள்வி :-வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சி நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றதே?
பதில்:- கடந்த காலத்தில் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் வடக்கு இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்தமை உண்மையாகும். . அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோல் அப்போதைய சூழ்நிலையை சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. அதே நிலைப்பாட்டில் இப்போதும் இருந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இப்போது வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு இல்லை. இன்று வடக்கு மக்கள் ஜனநாயக ரீதியில் செயற்படக்கூடிய சூழலை எமது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்போதும் அதே பழைய கருத்துக்களை முன்வைப்பது உண்மைக்கு புறம்பான செயற்பாடாகும்.
எனினும் உண்மைகளை தெரிவிப்பதில் எமது ஊடகங்களுக்கு முக்கியமான கடமை உள்ளது. அதை சரியாக தெரிவித்தால் இவ்வாறான சிக்கல்கள் வரப் போவதில்லை என்றார்.
-http://www.tamilwin.com