கணவனை இழந்ததை விட பல மடங்கு வேதனை தலைவனை இழந்ததே! முன்னாள் போராளி – துவாரகா

prabhakaran01என் இனிய உறவுகளே, என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? மௌனித்து கைகால் கட்டப்பட்டு ஒரு கூண்டுப் பறவையாக இருந்த நான் எனது குரலை ஓங்கி ஒலிப்பதன் மூலமாவது உங்கள் உள்ளங்கள் தட்டி எழுப்பப்படுமா?

எமது மக்களிற்காகவும் மண்ணிற்காகவும் போராட புறப்பட்ட தன்மானமுள்ள ஒரு முன்னாள் பெண் போராளி நான்.

பல வருடங்களாக மக்களுக்கான மகத்தான பணியை செய்துவந்தவள் நான். எனது கணவரும் ஒரு விடுதலைப் போராளியாக இருந்து இந்த மண்ணிற்கான உன்னதமான பணியாற்றியவர். அதனால் எனது கணவரையும் இழந்துவிட்டேன்.

இந்நிலையில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு காரணம் எனக்கு உதவ வேண்டும் என்பதற்காகவல்ல. எமது தமிழ் மக்களுக்கான தீர்வுகள் பற்றி நடுநிலையாக சிந்தியுங்கள். உங்களால் முடிந்தவரை கணவரை யுத்தத்தில் இழந்த பெண்களுக்கு உதவுங்கள். அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள்.

எமது தலைவனைப்பற்றியும் அவரின் உயர்ந்த பண்புகள் பற்றியும் எழுத தமிழில் உள்ள வார்த்தைகள் போதாது என்றே சொல்ல்வேண்டும். எமது தலைவனின் காலத்தில் ஈழத்தில் பிச்சைக்காரரர்கள், அநாதைகள் கணவரை இழந்த பெண்கள் என எவரும் நாதியற்று இருக்கவில்லை.

எம் தலைவனை இழந்தோம் என்று ஒரு வரியில் சொல்லிவிடமுடியாது. தமிழ் இனமே ஒப்பற்ற தலைவனை இழந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். எனது கணவரை இழந்த வேதனையிலும் பல மடங்கு வேதனை எம் தமிழ்த் தலைவனை இழந்ததால் அடைந்தேன்.

எம் இனம் இன்று நாதியற்ற நிலையில் அல்லாடிக்கொண்டுடிருக்கின்றது. எம் தலைவனால் தமிழருக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பார்கள் என உருவாக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றியை ஈட்டிய தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு தமிழருக்கு இதுவரை தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

ஆனால் தமது கட்சிக்குள்ளேயே முறுகல் நிலையை உருவாக்கி ஒற்றுமையற்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. சில அரசியல்வாதிகள் சுயலாபம் கருதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமக்குள்ளேயே நீயா நானா பெரிது என போட்டி;யிட்டு மக்களால் அமோக வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டவர்களை வீழ்த்த வேண்டும் என முயற்சித்துக்கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல் நாடு பெரிது என வாழுங்கள் என்று எம் தலைவன் அடிக்கடி கூறுவார். அந்த சிந்தனை இன்று அருகிவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பலப்படவேண்டும். சில ஊடகங்களும் நடுநிலையற்ற தன்மையில் செயற்படுவதுடன் தனிப்பட்ட தமது நலனை கருத்தில் கொண்டு ஊடக தர்மத்தை மீறி தனிப்பட நபர்களை உண்மைக்கு புறம்பாக விமர்சிப்பதும் கேவலப்படுத்துவதுமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. உண்மைக்கு புறம்பான செய்திகளை திரிவுபடுத்தி எந்தவிதமான கூச்சமுமின்றி வெளியிடுகின்றன.

ஊடகங்கள் நடுநிலையற்று செயற்படுகின்றபோதும் மக்கள் நடுநிலையானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை உணர ஊடகங்கள் தவறிவிடுகின்றன.

இவ்வாறான ஊடகங்களின் செயற்பாடுகளை நாம் கண்டிக்கவேண்டும். மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் அவர்களது உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும்தான் தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல்வாதிகளும் உரக்க குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை சீர்குலைப்பதற்காக மக்களை பிழையான வழியில் வழிநடத்த முயலும் ஊடகங்களின் கருத்துக்கள்; மக்களால் நிராகரிக்கப்படும் என்பதில் எந்தவித ஜயமுமில்லை.

தனிநபர்களை உண்மைக்கு புறம்பாக கொச்சைப்படுத்தும் ஊடகங்களை கண்டித்து குரல் கொடுங்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை, தமிழ் மக்களின் முதலமைச்சர் இருவருமே எமது மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க தேவையானவர்கள்.

சம்பந்தன் ஐயாவிடம் அரசியல் நுணுக்கமும் நீண்ட அரசியல் வரலாறும் முதலமைச்சரிடம் நீதிநியாயமான தன்மையும் எவருக்கும் பேரம் போகாத தன்மையும் இருப்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.

இரண்டுமே எமக்கு தேவை. தமிழ்த் தேசியத்தை சிதைக்க எவரும் எவருக்கும் துணைபோகாதீர்கள். தன்மானத் தமிழர்களாகிய நீங்கள் எவருக்கும் விலை போகாதீர்கள். பணத்திற்கும் சுகபோகத்திற்கும் ஆசைப்பட்டு விலைபோவதைவிட ஒவ்வொரு தமிழ் மகனும் தமது அடிப்படை உரிமைக்காகவாவது குரல் கொடுத்து அகிம்சை வழியில் போராடுவது மேலானாது.

எமது உயிரைவிட மேலானது தன்மானம். தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்.

அது மாத்திரமின்றி இன்றைய எமது சமூகத்தில் கணவரை இழந்த பெண்கள் மிக முக்கிய பேசுபொருளாக இருக்கிறார்கள். கணவரை இழந்த ஒரு பெண்ணை எமது சமூகம் பரிதாபமாகவும் பரிகாசமாகவும் பார்ப்பது மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும்.

கணவரை இழந்த பெண்களை எவரும் பரிதாபமாகவோ பரிகாசமாகவோ பார்க்காதீர்கள் என்பதே எனது தயவான வேண்டுகோள். கணவரை இழந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை அரவணைத்து அவர்களுக்கு வழிகாட்டிவிட வேண்டிய மாபெரும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

யுத்தம் என்கின்ற கொடிய அரக்கனால்தான் அநேகமான தமிழ்ப் பெண்கள் தமது வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள். இந்த நாதியற்று நிற்கும் பெண்களுக்கு கைகொடுங்கள். இன்றைய சமூகத்தில் ஒரு பெண் வேலை தேடி வெளியே செல்லும்போது சமூக பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் விடுதலை போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியதால் பல பெண்கள் தமது கல்வியையும் சொத்து சுகங்களையும் இழந்திருந்தார்கள். இந்நிலையில் தானாக உழைத்து தன்னம்பிக்கையுடன் தனது சொந்தக்காலில் நிற்க ஒரு பெண் ஆயத்தமாகும் போதும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள்.

நம்பிக்கைக்குரிய பாதுகாப்பிற்குரிய இடங்களாக அவள் எண்ணிச்சென்ற இடங்களிலேயே தமது சுயலாபம் கருதியே அவளுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க சில நிறுவனத்தினர் முனைகிறார்கள்.

அவ்வாறு வேலைக்கு சென்ற இடங்களில் அவர்களுடன் ஒத்திசைந்து ஒரு பெண் வேலை செய்யாவிடின் அவளை வெருட்டி கணவரை இழந்ததால் விசரி, விபச்சாரி என்ற தீய பட்டங்களை கொடுத்து சமூகத்தை நம்பவைக்க மாபெரும் முயற்சி எடுத்துவருகிறார்கள்.

தன்மானத்துடன் வேலை செய்யவேண்டும் என சென்ற பெண்களை அதாவது தன்மானத்தை இழக்காமல் துணிவுடன் எதிர்த்து போராடும் பெண்களை சில நிறுவனங்களில் ஆண் காவலாளிகளை கொண்டு விரட்டியடிக்கப்பட்டதை என் கண்களால் நேரடியாக கண்டன.

அவர்களது குடும்ப கௌரவத்தை அழிக்க முற்படுகிறார்கள். எனவே ஒரு கணவரை இழந்த பெண் நாதியற்று வாழும் போது வெருட்டப்பட்டு மௌனிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறாள். ;ஏனெனில் அவளது சுய கௌரவம் அவளுக்கு மேலாகிறது. ஒரு பெண் எழுத்தாற்றல் உள்ளவளாயின் அவளது சுதந்திரமான எழுத்துக்களை கூட எழுத முடியாமல் நசுக்கிவிடுகிறார்கள்.

என் உறவுகளே இவை அனைத்தும் என் நேரடி அனுபங்களே. இதனைவிட எழுத்தில் வடிக்கமுடியாத துன்ப துயரங்களை காலத்தின் கோலத்தில் என்றோ ஒருநாள் மனம் திறப்பேன்.

வெளிநாடுகளிற்கு செல்லக்கூடிய வாய்ப்புக்கள் பலதடவைகள் ஏற்பட்டும் சென்றுவிடாமல் எனது கொள்கைகளுக்காகவும் இலட்சியத்திற்காகவும் எமது மக்களின் துயரங்களை கண்ணுற்று அவர்களில் ஒருத்தியாக இருந்து துன்பங்களை அனுபவிப்போம் என நினைத்து எம் மண்ணிலேயே வாழ்ந்துவரும் நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.

புலம்பெயர் தமிழர்களே,உதவும் கரங்களே, புத்திஜீவிகளே எம் இனத்திற்காக குரல் கொடுங்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் அரவணைக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்ற புதுநம்பிக்கை அவர்களுக்கு உருவாகட்டும்.

அவர்களுக்கு நிரந்தரவாழ்வாதாரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் பல உதவும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தொழிற்சாலைகளை நிறுவி பாதுகாப்பான சூழலுடன் தன்மானத்துடன் சொந்தக்காலில் நிற்கக்கூடிய வகையில் கௌரவமான வேலைவாய்ப்பை அவர்களுக்கு வழங்கி உங்கள் பணத்தையும் பெருக்கிக்கொள்ளுங்கள்.

முன்னாள் ஆண்பெண் போராளிகளை கௌரவத்துடன் வேலை செய்யக்கூடிய வசதி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள். ஆறுவருடங்களுக்கு முன்னர் சென்று பழைய வாழ்வை மீட்டிப்பாருங்கள். எம் தலைவனின் நிர்வாகக்கட்டமைப்புக்களை எண்ணிப்பாருங்கள். புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவியாக பெற்ற பணத்தில் எமது மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் உன்னதமானது.

உங்களில் பலர் வன்னி மண்ணிற்கு விஜயம் செய்திருப்பீர்கள். அந்த நாட்களை எண்ணிப்பாருங்கள். உங்களிடம் ;எனது உருக்கமான வேண்டுகோள். மற்றவர்களுக்கு எப்படி எந்தவகையில் உதவவேண்டும் என்று வழிகாட்டிச்சென்றுள்ள எம் தலைவனின் வழியை பின்பற்றுங்கள்.

தற்போதைய ஆட்சி மாற்றம் எமக்கு இதுவரை எந்த தீர்வையும் பெற்றுத்தராவிடினும் தனிப்பட்ட வகையில் எளிமையும் மென்போக்கும் கொண்டவராக ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆகவே பயமின்றி மனிதாபிமான பணியாற்றமுன்வாருங்கள் என்பதே என் தயவான வேண்டுகோள்;. எனக்காக நான் எதனையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என மக்களுக்கான என்வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்.

துவாரகா
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: