இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்குபற்றுதல் இருக்கவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளில் சர்வதேச பங்களிப்பில் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது என்பதே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிலைப்பாடு என்று அவரது பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இடைமாறுபாட்டுக்கால நீதிக்கான பொறிமுறைகள் குறித்து ஆராயப்படுவதை செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அந்தப் பொறிமுறையில் நீதித்துறைக்கான கூறுகள் குறித்தும் ஆராயப்படுகின்றது. மேலும் பரந்துபட்ட தேசிய கலந்துரையாடல்கள் ஆரம்பமாகவுள்ளன. அவை பொறிமுறையின் நடைமுறை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை அறிய உதவும்.
இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கிய இலங்கை குறித்த மனித உரிமை பேரவையின் தீர்மானம் நம்பகத்தன்மை மிக்க நீதி செயல்முறை மற்றும் நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளில் சர்வதேச பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் உறுதியாக இருக்கும் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் என்று செயலாளர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் உதவியுடன் உள்ளக விசாரணை இடம்பெறும் என்று அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுக்கூட்டத் தொடரில் உறுதியளித்திருந்தது.
கடந்த செப்டெம்பர் மாத கூட்டத் தொடரில் இதற்கான பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச தலையீட்டுடன் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பி.பி.சி. செய்திச் சேவைக்கு அண்மையில் வழங்கிய பேட்டியொன்றில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கூற்றானது சர்வதேச ஒத்துழைப்புடன் உள்ளக விசாரணை இடம்பெறும் என்ற நம்பிக்கையிலிருந்த தரப்பினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்தே இலங்கையின் விசாரணைப் பொறிமுறையின் சர்வதேசத்தின் பங்குபற்றுதல் அவசியம் என்று தற்போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் பி.பி.சி. பேட்டியை அடுத்து போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயத்தில் அக்கறை கொண்டுள்ள தரப்பினர் பெரும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்திற்கு அளித்திருந்த உறுதிமொழியிலிருந்து தற்போது பின்வாங்குவது போல் தெரிகின்றது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவித்திருந்தார்.
இலங்கையில் உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகள் நீண்டகாலமாக தோல்வி அடைந்த வரலாறு உள்ள நிலையில் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிநடைமுறையில் நம்பிக்கை வைப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
இதேபோல் பல அமைப்புக்களும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. இலங்கையில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியின் கூற்றுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறும் இந்த சிவில் சமூக அமைப்புக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளன.
ஜனாதிபதியின் இந்தக் கூற்று வெளியான நிலையில் சனல்–4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் சம்பந்தப்படுவதை நிராகரிக்கவில்லை.
ஐ.நா. தீர்மானம் தொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டை பேணிக் கடைப்பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்தை தலையிடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை தொடர்பில் கருத்து கேட்டபோதே பிரதமர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
ஆனால் இந்தப் பேட்டி தொடர்பான செய்திகள், ஊடகங்களில் வெளியானதையடுத்து மறுநாள் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது கூற்றை மறுத்திருந்தார்.
போர்க் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நீதி விசாரணையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் சர்வதேச நீதிமன்றம் ஒன்றுக்கு உடன்படவில்லை. இந்த விசாரணையில் இலங்கையர் அல்லாத வெளிநாட்டவர் யாரேனும் பங்கு கொள்வது என்றால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேபோல் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் உள்ளக பொறிமுறை விசாரணையினை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்னவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணை உள்ளக விசாரணையாகவே இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் தொடர்ந்து இருந்து வருகின்றது. வேண்டுமென்றால் வெளிநாட்டு நீதிபதிகளிடம் சட்ட உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை பெற்றுக் கொள்வோம் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து கூறியிருந்தார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் தற்போது ஆழமான முறையில் ஆராய்ந்து வருகின்றது. அந்த வகையில் விரைவில் இது குறித்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியின் பின்னர் சில நாட்கள் கழித்து கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன சர்வதேச விசாரணையை ஒருபோதும் தட்டிக்கழித்து செயற்பட முடியாது. அவ்வாறு தட்டிக்கழித்து செயற்பட்டால் நாடு சர்வதேசத்திற்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு விடும். எவ்வாறாயினும் எமது ஆட்சிக்காலத்தில் சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து சகல சவால்களிலும் வெற்றிபெற்று நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்.
அரச தலைவர்களின் இத்தகைய கருத்துக்களிலிருந்து மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை பொறிமுறையினை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது தொடர்பில் குழப்பமான நிலை காணப்படுகின்றமை தெளிவாகின்றது.
சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்னமும் உறுதியான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் வரவில்லை என்றே தெரிகின்றது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் இன்று அந்த நிலைப்பாட்டிலிருந்து சற்று பின்வாங்க முயற்சிக்கின்றதோ என்ற ஐயப்பாடு எழுகின்றது.
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனான விசாரணைக்கு இராணுவத்தினரும், சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்களோ என்ற அச்சம் அரசாங்கத்தின் மத்தியில் குடிகொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
இதனால் தான் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தடுமாற்றமானதும் முரணானதுமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விடயத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமே சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
-http://www.tamilwin.com