உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும். அதனை பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது. இணைந்த எதிர்க்கட்சியல்ல எவரா லும் அரசாங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான கபிர் ஹாஷீம் தெரிவித்தார்.
உள்ளக பொறிமுறை விசாரணை யில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் தெரிவித்திருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேட்டபோதே அமைச்சர் கபிர் ஹாஷீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு. எனவே எமது நாட்டின் விடயங்கள் தொடர்பில் நாமே தீர்மானிக்க வேண்டும். ஐ.நா. ஆணையாளர் பான் கீ மூன் எந்தக் கருத்தைகயும் சொல்லலாம். தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.
ஆனால் உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமா? இல்லையா? என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான நிலைப்பாட்டில் இருக்கின்றார். அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்.
எமது உள்ளக விசாரணையில் எவரும் தலையிட முடியாது. அனைத்தும் இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரமே தீர்மானிக்கப்படும். அரசியல் அமைப்பை மீறி செயற்படமாட்டோம். இது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம்.
எனவே பான் கீ மூன் தனிப்பட்ட ரீதியில் எந்தக் கருத்துக்களையும் வெளியிடலாம். ஆனால் இறுதி முடிவு எமது கைகளிலேயே தங்கியுள்ளது. இது தொடர்பில் உள்நாட்டில் முகவரி இல்லாமல் அரசியல் ரீதியாக அனாதைகளாக்கப்பட்டவர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக பொய் பிரசாரங்கள் செய்கின்றனர்.
உள்ளக விசாரணைக்கு சர்வதேச ரீதியில் ஆலோசனைகள், சட்டத்தரணிகளின் தேவைகள் இருக்குமானால் அது தொடர்பாக இலங்கையில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்பதை பிரதமர் தெளிவாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டை பாதுகாப்பதும், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதும் அரசின் தலையாய கடமையாகும். என்றார்.
-http://www.tamilwin.com