இந்த மனிதப் பிறவியில் சோகமில்லாதவன் மனிதாக வாழமுடியாது. சோகங்களும், அதன் பிரதிபலிப்புக்களும் வாழ்க்கையில் கண்டிப்பாக இருந்தே தீரும். இதனை இதிகாச புராணங்களில் இருந்து கற்றுவந்திருக்கின்றோம்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வந்த சோகமும் அப்படிப்பட்டது தான். இலங்கையின் நிரந்தர மன்னனாக தன்னை நினைத்து வந்தவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஏற்றுக்கொள்ள முடியாதவொரு தோல்வியை, சோகத்தை சந்தித்து இருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு இன்னுமொரு சோகம். புலிகளை அழித்து நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி சிங்கள மக்களின் பாதுகாவலனாக இருந்தவருக்கு இப்படியொரு சோகத்தை மைத்திரிபால சிறிசேன கொடுப்பார் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சோகம் ஆட்சியிழப்பு, இந்த ஆண்டு ஏற்பட்ட சோகம் புத்திர சோகம். ஆட்சியிழப்பைக் காட்டிலும் புத்திரசோகம் மோசமானது என்பதை அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உணர்ந்திருப்பார்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன் கிடைக்கும் என்கிறது இந்து மதம்.
இராமாயணத்தில் தசரதன் தெரியாமல் செய்த செயலுக்காக கிடைத்த தண்டனை நமக்கு நினைவில் இருக்கலாம்.
அழகிய மானின் மீது ஏவிய அம்பின் வழி ரிசியின் புதல்வனை மாய்த்தார் தசரதன். ஆசையாய் பெற்ற புதல்வன் மண்ணில் சாய்கையில், எவ்வாறு இன்று புத்திரனை நான் இழந்து புத்திர சோகத்தில் நான் கண்ணீர் சிந்துகின்றேனோ அவ்வாறே நீயும் கண்ணீர் சிந்துவாய் என்று சாபம் இடுகின்றார் முனிவர்.
முனிவர் நினைத்திருந்தால், அடைந்த கோபத்தினால் தசரதனுக்கு ஏதோனும் சாபம் கொடுத்திருக்கலாம். இல்லையாயின் தன் கோப அக்கினியால் தசரதனை எரித்திருக்கலாம். ஆனால் நீயும் புத்திரனை பிரிந்து புத்திர சோகத்தில் தவிப்பாய் என்கிறார்.
இங்கு தான் ஒரு உண்மையை இராமாயணத்தை எழுதிய வான்மீகி வைக்கிறார். ஒருவர் செய்யும் செயலுக்காக அவனை தண்டிப்பதைக் காட்டிலும், அவனின் புதல்வர்களை தண்டித்தாலே போதும். ஏனெனில் அது அவன் நேரடியாக அடையும் துன்பத்தை காட்டிலும் பெரியது என்கிற உண்மை புலப்படுகின்றது.
அந்த துன்பத்தை தான் இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச செய்யாத கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தனைக்கும் அவர் தண்டனை பெற வேண்டுமாயின் அவருக்கு இந்தப் பிறவே போதாது. ஆனால் தசரதனுக்கு நடந்த அதே சோகம் தான் இன்று மகிந்த ராஜபக்சவை வாட்டி வதைக்கிறது.
ஆசையாக பெற்ற புதல்வனை, கடற்படையில் சேர்த்து, வெளிநாட்டில் படிக்க வைத்து, பட்டம் பெற வைத்து, அழகு பார்த்தவருக்கு, சிறையில் போய் பார்ப்பேனோ என் மகனை என்று நினைத்திருக்க மாட்டார். அதனால் தான் கண் கலங்கி நெக்குறுகிப் போனார் மகிந்தர்.
யோசித ராஜபக்ச தொடர்ந்து சிறையில் இருப்பார் அவர் தண்டிக்கப்படுவார் என்று நினைப்பதைக் காட்டிலும், அவர் விரைவில் வெளிவருவார் என்பது தான் நிஜம். அரசியலில் இது எல்லாமே சாதாரணமானது தான். ஆனால் மகிந்த ராஜபக்ச அனுபவித்த இந்த புத்திரசோகம் சொல்லில் வடிக்க முடியாத ஒன்று.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதைப் போலவே இது நடந்திருக்கிறது. எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இன்றுவரை எங்கே என்று தெரியாமல் கண்கலங்கி, நோய்வாய்ப்பட்டு, இறுதிச் சடங்கு கூட தங்கள் பிள்ளைகளின் கரங்களினால் செய்ய முடியாமல் ஆத்மா சாந்தியடையாமல் இன்றுவரை இருக்கின்றன.
இவை யாவற்றுக்கும் மேலாக, எந்த விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கண்ணீரும், அவர்களின் அவலக் குரல்களும் மற்றவர்களை நிம்மதியாக வாழ விடாது.
இராண்டு வார காலத்திற்குள் யோசித ராஜபக்ச வெளியில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இருப்பினும் மகிந்தரின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் பதில் சொல்லியிருக்கும் பெற்ற புதல்வர்களின் பிரிவின் துயரை.
என்ன செய்வது, அன்று தசரதன் அறியாமல் செய்த தவறுக்காக தன் பிள்ளையை பிரிய வேண்டியதாயிற்று. தான் செய்த தவறுக்காக மகன் வனவாசம் அனுபவித்தான். தசரதன் தாங்க முடியாத வேதனையில் உயிர் பிரிந்தது. இறுதிக் கிரியை கூட தன் ஆசைப் புதல்வனின் கரத்தினால் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை தசரதனுக்கு.
அதே நிலை இன்று மகிந்தருக்கு. என்ன தசரனின் மைந்தன் தர்மத்தை ஸ்தாபித்தார் வனத்தில். ஆனால் மகிந்தரின் புதல்வர் அதர்மத்தை சாதித்தவர். மக்களின் வரிப்பணத்தை தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக பயன்படுத்தினார்கள். அதனால் இன்று அனுபவிக்கின்றார்கள்.
மகிந்த ராஜபக்ச தான் செய்த வினைக்காக தான் இன்று புத்திர சோகத்தை அனுபவிக்கின்றார். ஒரு போதும் மகிந்த ராஜபக்ச சிறைவாசம் அனுபவிக்க மாட்டார். ஆனால் அவரின் புதல்வர்கள் அனுபவித்தே தீருவார்கள்.
இது நடக்கும். தான் பெற்ற பிள்ளைகளின் சிறை வாழ்வைக் கண்டு மகிந்தரின் மனம் மெல்லச் சிதையும். பிள்ளைகளின் பிரிவு நிச்சையம் அவரை வாட்டும். அதுவே அவருக்கு காலனாகும். ஆயிரம் நீதிமன்றங்களில் இருந்தும் தப்பலாம். ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும். விடுதலை பெறலாம். ஆனால் மக்களின் அவலக் கண்ணீரில், மக்களின் சாபத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
எத்தனை தடவை நான் கொல்லவில்லை, அழிக்கவில்லை, சிதைக்கவில்லை. நன்மையே செய்தேன் என்று கூறினாலும், அநீதிக்கான, அட்டூழியத்திற்கான விடைகள் கிடைக்கும். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமில்லை.
சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல. ஊழ்வினை வந்து உருத்தும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். காலம் எல்லாத்துக்குமான விடையை வைத்திருக்கிறது.
தமிழ்த் தாய்மார் விட்டுக்கொண்டிருக்கும் கண்ணீர் மகிந்த ராஜபக்சவிற்கான சாபமாகவே இருக்கும். அது சாதாரண கண்ணீரல்ல. அது தான் அவரின் சிரிப்பை மெல்லச்சிதைக்கும் அக்கினி.
இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறையவே உண்டு. மெல்ல மெல்ல அது நடக்கும். தெய்வம் நின்று கொல்லு(ள்ளு)ம். நீதிமன்றங்களிடம் இருந்து தப்பிக்கலாம். நீதியிடமிருந்து தப்பிக்க முடியாது.
எஸ். பி. தாஸ்
-http://www.tamilwin.com
இந்த மனிதப் பிறவியில் சோகமில்லாதவன் மனிதாக வாழ முடி யாது. சோகங்களும், அதன் பிரதிபலிப்புக்க ளும் வாழ்க்கையில் கண் டிப்பாக இருந்தே தீரும். இத னை இதிகாச புராணங்களில் இருந்து கற்று வந்திருக்கின் றோம். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல. ஊழ் வினை வந்து உருத்தும். அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும். காலம் எல்லாத்துக்குமான விடையை வைத்திருக்கிறது.