தமிழில் தேசிய கீதம் நல்லிணக்கத்திற்கான மற்றுமொரு படி!- ஆங்கில ஊடகம்

ranil-mai3இலங்கையின் உள்நாட்டு போருக்கு பின்னர், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு படியாக உத்தியோகபூர்வமற்ற முறையில் தடை செய்யப்பட்டிருந்த இலங்கை தேசிய கீதத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.

சிங்கள பாடசாலை மாணவ, மாணவிகள் சிங்களத்தில் தேசிய கீதத்தை பாடியதுடன், தமிழ் பாடசாலை மாணவ, மாணவிகள் தமிழில் தேசிய கீதத்தை பாடினர்.

சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது 2009ம் ஆண்டு வரை தமது தனியான தாயகத்திற்காக 26 வருடங்கள் போரிட்ட தமிழ் மக்களை நெருக்கமாக்கி கொள்ளும் முயற்சியாகும்.

நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர், நாட்டின் ஐக்கியத்திற்காக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை எனவும் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

போருக்கு பின்னர், போர் வெற்றியினால், கடும் போக்காளரான மகிந்த ராஜபக்ச தமிழ் சமூகத்துடன் விரசத்தை ஏற்படுத்தியதாக என ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்புகளை முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமற்ற தடையை விதித்திருந்தார்.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அரசியல் எதிராளிகள், போரில் ஈடுபட்ட முப்படையினருக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தண்டனை வழங்க போகிறார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் முப்படையினரின் கௌரவத்தை பாதுகாத்து, நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தை உலகம் அங்கீகரிக்கும் இராணுவமாக மாற்ற வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஐ.நா பரிந்துரைகள் தொடர்பில் தமது அரசாங்கம் சில எதிர்க்கட்சிகள் மற்றும் தேசியவாத சிங்கள பௌத்த குழுக்களின் எதிர்ப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட போரில் கண்மூடித்தனமான ஷெல் வீச்சு தாக்குதல்களை நடத்தியதாகவும் கொலை, பலவந்தமாக காணாமல் போகச் செய்தமை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்களை கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டது.

அதேவேளை சிறுவர்களை படையில் சேர்த்தமை மற்றும் பொதுமக்களை கொலை செய்தமை தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் கடந்த வருடம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இரண்டு தரப்பினரும் போர் குற்றங்களையும், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களையும் இழைத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: