சொல்லளவிலின்றி செயலில் இந்தியா காண்பிக்க வேண்டும்!

sushma-sampanthan-01இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும், தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது உறுதி வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் என பலதரப்பினரையும் சந்தித்து விரிவான பேச்சுவார்ததை நடத்தியிருந்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சம்பந்தன் எம்.பி., இந்த சந்திப்பு மிகவும் சுமுகமானதாகவும் திருப்திகரமான முறையிலும் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டது.

விசேடமாக காணி தொடர்பான பிரச்சினைகள், இராணுவத்தின் அதிக பிரசன்னம், தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி, மீனவர் பிரச்சினை போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும், இச்சந்திப்பில் ஆராயப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

சந்திப்பின் இறுதியில் இந்தியா எப்பொழுதும் சரியான விடயத்தின் பக்கமே நிற்கும் என்றும் இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும் எனவும் தீர்வுக்கான இந்திய அரசின் முயற்சிகள் தொடரும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எம்மிடம் உறுதியளித்தார் எனவும் சம்பந்தன் கூறியிருக்கின்றார்.

இதேபோல் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினரும் இந்திய வெளி விவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு சினேகபூர்வமாக அழுத்தம் தரவேண்டும். இந்த அழுத்தம் தற்போது நமது தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு தயாரித்து வரும் யோசனை வரைவுகள் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதற்கு உதவவேண்டும்.

கடந்த காலங்களில் போலல்லாமல், இன்று வடக்கு, கிழக்கிற்கு வெளியில்வாழும் தமிழ் மக்களுக்கு குறிப்பாக மலையக மக்களுக்கு உரிய தேசிய அவதானத்தை நமது புதிய கூட்டணி சுறுசுறுப்புடன் பெற்றுத் தந்து கொண்டுள்ளது.

இன்று புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் நாம் உள்வாங்கப்பட்டுள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதேபோல் தொழிலாளர் காங்கிரஸ்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் இலங்கையில் புதிய அரசாங்கத்தின் மீது இந்திய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கை தொடர்பில் சுஷ்மா சுவராஜ் எடுத்துக் கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறந்த தலைமைத்துவத்தில் எமக்கு நம்பிக்கை உள்ளது. அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவளிப்பதுடன், ஒத்துழைப்பு நல்கும்.

அயல்நாடுகளில் இலங்கைக்கு முக்கியத்துவத்தை வழங்குகின்றோம் என்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து புதிய அரசாங்கத்தின் மீது இந்திய பா.ஜ.க. அரசாங்கமானது வைத்துள்ள நம்பிக்கை தெளிவாகின்றது. அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய மத்திய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கும் சமத்துவமான தீர்வுகாண துணைநிற்பதாக தெரிவித்திருக்கின்றது.

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை எடுத்துக்கொண்டால் இந்தியாவை புறந்தள்ளிவிட்டு நிலைத்து நிற்கக்கூடிய தீர்வினை காண்பது என்பது சாத்தியமற்ற விடயமேயாகும்.

எனவே இந்தியாவின் ஒத்துழைப்புடன் தீர்வுக்கு முயற்சி எடுப்பதே சிறந்த நடவடிக்கையாகும்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இனப்பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வினை காணவேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளன.

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அன்று தொட்டு இன்றுவரை தலையீடு செய்தே வருகின்றது. தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு பயிற்சி வழங்கியதுடன் ஆயுதங்களையும் இந்தியா அன்று வழங்கியிருந்தது.

தமிழ்ப் போராளிக்குழுக்கள் இந்தியாவின் அனுசரணையுடனேயே வளர்ச்சி கண்டிருந்தன. இந்தியாவின் அனுசரணையுடனேயே திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

1987 ஆம் ஆண்டு இந்திய- – இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டுவரப்பட்டது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரும் வகையிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் வடக்கு, கிழக்கில் இந்த முறைமையானது உரிய வகையில் அமுல்படுத்தப்படவில்லை.

2009ம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இந்தியா பல வழிகளிலும் உதவியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட அன்றைய அமைச்சர்கள் வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்தியாவின் ஒத்துழைப்பு காரணமாகவே யுத்தத்தில் வெற்றி பெறக்கூடிய நிலை ஏற்பட்டதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பு பகிரங்கமாகவே தெரிவித்து வந்தது.

இவ்வாறு தமிழ் மக்களின் பேரழிவுக்கு காரணமாக அமைந்த கொடூர யுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய இந்தியா, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வொன்றினை வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமேயாகும்.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்து தற்போது ஏழு வருடங்கள் ஆகின்றன. ஆனால் யுத்தத்திற்குக் காரணமாக அமைந்த அடிப்படைப் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வொன்று காணப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இழுத்தடிப்புப் போக்கையே கடைப்பிடித்து வந்தது.

அன்றைய அரசாங்கத்தின் இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய வகையில் அழுத்தங்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் மேலெழுந்திருந்தது.

தற்போதைய நிலையில் இலங்கையில் புதிய நல்லிணக்க அரசாங்கம் பதவியேற்றிருக்கின்றது. நிலைமைகள் ஓரளவுக்கு சாதகமாக அமைந்து வருகின்றன.

புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பகிரங்கமாக பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. ஆனால், மறைமுகமான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவே தெரிகின்றது.

2016ம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அடிக்கடி நம்பிக்கை வெளியிட்டு வருகின்றார்.

இதிலிருந்து அரசாங்கத்துடன் இணக்க அரசியலை மேற்கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எண்ணுவது புலனாகின்றது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் சமத்துவமான தீர்வை காண்பதற்கு இந்தியா தன்னாலான முழு அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

வெறும் சொல்லளவில் இன்றி, செயலளவில் இந்தியாவின் செயற்பாடு அமையவேண்டும். இதன் மூலமே இனப்பிரச்சினைக்கு நீதி நியாயமான தீர்வை தற்போதாவது காணக்கூடிய நிலை ஏற்படும்.

இவ்விடயம் தொடர்பில் இந்தியா கூடிய கரிசனை கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: