பிரான்ஸ் நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள அகதிகளை பாதுகாக்க வந்த பொலிசாரை சுமார் 150 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பிரான்ஸில் உள்ள கெலைஸ் என்ற பகுதியில் 2 அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3,700 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லொறிகள் மற்றும் ரயில்களில் ஏறி பிரித்தானியா நாட்டிற்கு தப்பி செல்லும் காட்சிகள் அடிக்கடி அரங்கேறும்.
இந்நிலையில், கெலைஸ் பகுதியில் இருந்து ஒட்டுமொத்த அகதிகளையும் வெளியேற்றும் வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான பெகிடா இயக்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆனால், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bernard Cazeneuve ‘போராட்டத்தை எப்படியாவது தடுத்தி நிறுத்தி அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு’ பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
கெலைஸ் பகுதியில் சுமார் 150 போராட்டக்காரர்கள் குவிந்த நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த பொலிசார் விரைந்துள்ளனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக தாக்குதல் நடந்துள்ளது. இதில் சில பொலிசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
எனினும், போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிசார் பெகிடாவை சேர்ந்த 10 போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, கெலைஸ் பகுதியில் உள்ள முகாம்களில் பாதுகாப்பும் சுகாதாரமும் இல்லாமல் இருப்பதால், அங்குள்ள குழந்தைகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதற்கு பிரான்ஸ் அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அகதிகளுக்கான ஐ.நா உயர்மட்ட ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com