உத்தேச (புதிய) அரசியல் யாப்பும் தமிழ் மக்களும்

srilanka_flag_002இலங்கையின் தற்போது அமுலிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை நீக்கிப் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றினை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து எழுத்துமூலமான மற்றும் வாய்மூலப் பிரேரணைகளைப் பெறுவதற்காக அதற்கென்று நியமிக்கப்பெற்ற அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழு தனது பணியை 18.01.2016 அன்று கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது.

இக்குழு ஏனைய மாவட்டங்களுக்குச் செல்லும் திகதிகளும் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தேச புதிய அரசியல் யாப்பு மூன்று முக்கியமான நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்படுகின்றது எனப் பேசப்படுகிறது.

அவையாவன:

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்குதல், தற்போதுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அதிகாரப் பகிர்வு.

இவற்றில் இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் கூடுதலான அக்கறை கொள்ளும் விடயமாக அதிகாரப் பகிர்வே விளங்குகிறது.

வடக்கு கிழக்குத் தமிழர்களின் கடந்த அறுபது வருடகால உரிமைப் போராட்ட அரசியலின் குவிமையம் அதிகாரப் பகிர்வே ஆகும்.

இதுவரையிலான இலங்கையின் அரசியலமைப்பு எதுவும் தமிழர்கள் எதிர்பார்த்த அதிகாரப் பகிர்வை வழங்கியிருக்கவில்லை.

இறுதியாக 1978 ம் ஆண்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையான அரசியலமைப்புக்கு 1987 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கிணங்கக் கொண்டு வரப்பட்ட பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்விலும் குறைபாடுகள் உள்ளன என்பதும்,

அக்குறைபாடுகளுடனான பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்தானும் இதுவரை அதாவது ஒப்பந்தம் எழுதப்பட்டு கால்நூற்றாண்டைக் கடந்தவிட்ட நிலையிலும் முழுமையாக அமுல் செய்யப்படவில்லையென்பதும்,

கடந்தகால அனுபவங்கள். இத்தகையதொரு அனுபவப் பின்புலத்தில்தான் அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தைத் தமிழ்மக்கள் நோக்க வேண்டியுள்ளது.

அதிகாரப் பகிர்வு எனும்போது அதிகாரப் பகிர்வு அலகின் வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்ற விடயம் முன்னெழுவதாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு மொழிவாரி அலகுக்காகவே கடந்த அறுபது வருடகால உரிமைப்போராட்ட அரசியலில் பல தியாகங்களைச் செய்துள்ளனர்.

பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். எனவே தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அதிகாரப் பகிர்வு அலகு இதுவரை காலவரையிலான இழப்புக்களை ஈடு செய்யும் வகையிலும் அவர்தம் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் வகையிலும் அமைவது அவசியம்.

அப்படிப் பார்க்கும்போது உத்தேச அரசியல் யாப்பின் அதிகாரப்பகிர்வின் அலகுகளிலொன்று வடக்கு கிழக்கு பிரிக்கப்படாத தனிப் பிராந்தியமாக அல்லது தனி மாகாணமாக அமைய வேண்டும்.

1988 இலிருந்து 2008 வரை இருபது வருடங்கள் இணைந்த வடக்குகிழக்கு மாகாணம் தனியான நிர்வாகத்தின் கீழ் எந்த இடர்ப்பாடும் இல்லாமல் இயங்கியது என்பதை இப்போது மனங்கொள்வது அவசியம்.

ஜே.வி.பி யினால் தொடரப்பட்;ட வழக்கொன்றின் மூலம் வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் 2008 இல் நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டமை ஓர் அரசியல் விபத்து ஆகும்.

எனவே மேற்கூறப்பட்ட “அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழு” வடக்கு கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களில் மேற்கொள்ளும் அமர்வுகளின் போது தமிழ்; மக்களிடையேயுள்ள பொதுநிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மதத்தலைவர்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள்,

தொழில்சார் தகைமையாளர்கள், கலை இலக்கிய- ஊடக- சமூக – அரசியல் செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசியல்கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து வடக்கு கிழக்கு பிரிக்கப்படாத ஓர் அதிகாரப்பகிர்வு அலகினை வலியுறுத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள இச் சந்தர்ப்பத்தினை அதி உச்சமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் செயற்படும் பொது அமைப்புக்கள் யாவும் இதுவிடயமான விழிப்புணர்வை மக்களுக்கு இப்போதிருந்தே தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

அடுத்தபடியாக நாம் சிந்திக்க வேண்டியது உத்தேச அதிகாரப் பகிர்வு அலகுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் பற்றியதாகும்.

தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதாவது பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் குறித்துக் குறைபாடுகள் இருந்தாலும்கூட,

பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினை முற்றாகப் புறந்தள்ளிவிடாமல் அதனை அடிப்படையாகக் கொண்டே மேற்செல்ல வேண்டும்.

ஜெனீவாத் தீர்மானம் பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை வலியுறுத்தியுள்ளது. தென்னிலங்கை – இந்துசமுத்திரப் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கணக்கிலெடுக்கும்போது பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு அதில் உள்ள குறைபாடுகளை உத்தேச புதிய அரசியல் யாப்பில் நிவர்த்தி செய்து கொள்ளுகின்ற பிரேரணைகளே நடைமுறைச் சாத்தியமானவை.

அதிகாரப் பகிர்வு விடயங்களைப் பொறுத்தவரை தற்போதுள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 2000 ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க முன்வைத்த அரசியலமைப்புச் சட்ட மூலம்,

மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் 2006 ம் ஆண்டின் பேராசியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கான நிபுணர்குழுவின் அறிக்கை முதலிய ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்து அவற்றிலுள்ள சாதகமான விடயங்களைத் தொகுத்தெடுத்துப் பிரேரணைகளாக முன்வைக்கலாம்.

அரசியல் கட்சிகள் தங்கள் பிரேரணைகளையும் வரைபுகளையும் முன்வைப்பார்கள். அது ஒரு புறம் நடக்கட்டும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது அரசியல் கட்சிகளின் வேலை என்றெண்ணி அலட்சியமாகவும் அசமந்தமாகவும் இருந்து விடாமல் மிகவும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்வந்து தங்கள் ஆலோசனைகளை எழுத்து மூலமும் வாய்மூலமும் மேற்கூறப்பட்ட குழுவிடம் முன்வைக்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பின்வரும் சில விடயங்களைக் குறிப்பிடுதல் இப்பத்தியின் நோக்கத்திற்கமையப் பொருத்தம் ஆகும்.

உத்தேச பிராந்தியம் அல்லது மாகாணத்தின் ஆளுநர் நிறைவேற்று அதிகாரம் அற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் பிராந்தியம் அல்லது மாகாணம் தனக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பரப்பில் சுயமாக இயங்க முடியும்.

பிராந்தியங்களுக்கு அல்லது மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரப் பரப்புக்களைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்களும் (அரசாங்க அதிபர்), பிரதேச செயலாளர்களும், கிராம சேவை உத்தியோகத்தர்களும் மாகாண முதலமைச்சருக்கே பொறுப்புக் கூறுவதாயிருக்க வேண்டும்.

மாநாகர சபை, நகரசபை மற்றும் பிரதேசசபைகளான உள்ளூராட்சி அலகுகளின் முழுநிர்வாகமும் முழுமையாகப் பிராந்திய அல்லது மாகாண முதலமைச்சரின் கீழேயே கொண்டுவரப்படல் வேண்டும்.

தற்போதுள்ள அதிகாரங்களை விடக் கூடுதலாக உள்ளூராட்சி அலகுகளுக்குக் கூடுதலான அதிகாரங்களை உத்தேச புதிய அரசியல் யாப்பில் வழங்கலாம்.

உதாரணமாகப் பாலர் பாடசாலைகளின் நிர்வாகம் உள்ளூராட்சிச் சபைகளின் கீழ் கொண்டு வரப்படலாம்.

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக தற்போதைய மாகாண சபைகளுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களிலுள்ள குழப்பநிலை உத்தேச புதிய யாப்பில் களையப்பட்டு அவை தெளிவாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

மத்திய அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பட்டியல், பிராந்திய அல்லது மாகாணத்திற்குரிய அதிகாரப்பட்டியல் என இரு பட்டியல்களே உத்தேச புதிய யாப்பில் தெளிவாக வரையறை செய்யப்பட்டு உள்ளடக்கப்படல் வேண்டும். அதாவது “ஒருங்கியை நிரல்”  தவிர்க்கப்படல் வேண்டும்.

தேசிய நீர்ப்பாசனம்- தேசிய நெடுஞ்சாலைகள் – யேவழையெட ர்iபாறயலள போன்றவை குறித்த தெளிவான வரைவிலக்கணங்கள் உத்தேச யாப்பில் வகுக்கப்படல் வேண்டும்.

பிராந்திய சபை அல்லது மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்தாலொழிய அல்லது அதனைக் கலைக்கும்படி அச்சபை மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் தீர்மானித்தாலொழிய பிராந்திய சபை அல்லது மாகாண சபை ஆளுநரினாலோ அல்லது ஜனாதிபதியினாலோ கலைக்கப்படல் ஆகாது.

மொத்தத்தில் தற்போதுள்ள பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் உத்தேச புதிய அரசியல் யாப்பில் செறிவாக்கப்பட வேண்டுமே தவிர ஐதாக்கப்படக் கூடாது.

தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: