சிரியா உள்நாட்டுச் சண்டையை நிறுத்துவது தொடர்பாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாடுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
சிரியாவில் அரசுக்கு எதிரான பல்வேறு அடிப்படைவாத கிளர்ச்சிக் குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன.
இதையடுத்து லட்சக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். உள்நாட்டிலேயே பெரும் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷிய உதவியுடன், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் முயற்சியில் சிரியாவில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த உடன்பாடு, முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான முதல் படி எனக் கூறப்படுகிறது.
சிரியாவில் 2.6 லட்சம் பேரது உயிர்களைப் பலி வாங்கிய உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை, ஐ.நா. மேற்பார்வையில் இந்த மாதத் தொடக்கத்தில் ஆரம்பமானது.
எனினும், ரஷிய வான்வழித் தாக்குதல் மற்றும் ஈரான் ஆதரவுப் படையினரின் உதவியுடன் அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்க சிரியா படையினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியதையடுத்து, அந்தப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில், சிரியா விவகாரத்துக்குத் தீர்வு காண விழையும் 17 நாடுகள் அடங்கிய “சிரியா ஆதரவுக் குழு’, ஜெர்மனியின் மியூனிக் நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தையின் முடிவில், சிரியா நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர 17 நாடுகளும் ஒப்புக் கொண்டன.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது:
எந்த நிபந்தனையும் இன்றி, இன்னும் ஒரு வாரத்துக்குள் சிரியா முழுவதும் “பகை நடவடிக்கை’களையும் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன.
மேலும், சிரியாவில் மனிதாபிமானப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
உடனடி உதவி தேவைப்படும் பகுதிகளுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் இந்த வாரத்துக்குள் தாராளமாக விநியோகிக்கத் தொடங்கப்படும்.
சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கூடிய விரைவில் மீண்டும் தொடங்கும்.
“செயல்படுத்தப்பட வேண்டும்’: சிரியாவில் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அதனை செயல்படுத்தப்படுவதுதான் மிக முக்கியம்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த ஒப்பந்தத்தின் செயலாக்கம், சிரியா அரசு, கிளர்ச்சிப் படை, ஹிஸ்புல்லா குழு, எதிர்க்கட்சிப் படை, ரஷியா ஆகியவற்றின் கைகளில் உள்ளது என்றார் அவர்.
உலகப் போர் மூளும்: ரஷிய பிரதமர்
மியூனிக் நகரப் பேச்சுவார்த்தையின்போது, “அரசுக்கு எதிரான படையினருக்கு ஆதரவாக, வளைகுடா நாடுகள் தரைப்படை வீரர்களை அனுப்பினால் மற்றோர் உலகப் போர் மூளும்’ என ரஷிய பிரதமர் டிமித்ரி மெத்வதேவ் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.இதனால், பேச்சுவார்த்தையில் இறுக்கமான சூழல் நிலவியது.
இந்தச் சூழலிலும், சிரியாவில் தாற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அனைத்து நாடுகளும் பேச்சுவார்த்தையின் முடிவில் ஒற்றுமையாகச் சம்மதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com