லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பா அனுப்பிவிடுவோம்: துருக்கி அதிபர் எர்டோகன் மிரட்டல்

“அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பா எங்களை ஏமாளியாகக் கருதினால், எங்கள் நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டியதாக துருக்கி அதிபர் ரிùஸப் தாயிப் எர்டோகன் தெரிவித்தார்.

உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் இராக் மற்றும் சிரியாவிலிருந்து தப்பி, அண்டை நாடான துருக்கியில் லட்சக்கணக்கான அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களில், புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் துருக்கி வழியாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பா வந்தடைந்தனர்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

அப்போது, துருக்கியிலிருந்து அகதிகளை ஏற்றி வரும் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்காக நேட்டோ படைக் கப்பல்களை துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் நிறுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்தன.

மேலும், தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகளை துருக்கிக்கே திருப்பி அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக கிரீஸ் தெரிவித்தது.

ஐரோப்பிய நாடுகளின் இத்தகைய நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துருக்கி அடைக்கலம் கொடுத்துள்ள லட்சக்கணக்கான அகதிகளை விமானம், பேருந்து மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் போவதாக, அதிபர் எர்டோகன் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.

துருக்கி தலைநகர் அங்காராவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதன் ஒப்புக்கொண்ட எர்டோகன், இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளை நான் அவ்வாறு மிரட்டியதில் தவறில்லை.

நமது நெற்றியில் “முட்டாள்’ என்று எழுதி ஒட்டியிருக்கவில்லை.

நம்மாலும் ஓரளவுவரைதான் பொறுமை காக்க முடியும்.

அகதிகள் மட்டுமின்றி, துருக்கியின் உரிமைக்காகவும் நாம் போராட வேண்டும்.

அகதிகளைப் பராமரிப்பதற்காக 303 கோடி டாலர் (ரூ.20,600 கோடி) தருவதாகக் கூறிய ஐரோப்பிய யூனியன், இதுவரை அந்தத் தொகையை அளிக்கவில்லை என்றார் அவர்.
சிரியா மற்றும் இராக்கைச் சேர்ந்த 25 லட்சம் அகதிகள் துருக்கியில் தங்கியுள்ளனர்.

தற்போது சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்று வரும் போரால் மேலும் ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

-http://www.dinamani.com