நாட்டில் ஏற்பட்ட இந்த அழிவுகளுக்கு நாங்களும் ஒரு காரணம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் புளொட் அமைப்பின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களிடம் வந்தவர்களல்ல. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே மக்கள் முன்னிலையில் வந்தோம்.
ஆயுதப் போராட்ட அரசியலுக்குள் தமிழ் இளைஞர்கள் குதிப்பதற்கு நியாயமான காரணங்கள் அப்போது இருந்தன.
அன்றைய நிலைமையை இப்போது திரும்பிப் பார்க்கும் போதும் அந்தக் காரணங்கள் சரியானவை என்றே தோன்றுகின்றது.
அதில் சந்தேகமில்லை. இப்போது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டிருக்கின்றது.
மீண்டும் ஆயுதப் போராட்ட அரசியலுக்குள் போகக் கூடிய சூழல் இல்லையென்பதை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் நன்கு உணரப்பட்டிருக்கின்றது.
யுத்தத்திற்குப் பின்னரான இந்தக் காலப்பகுதியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது.
ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் எமது கட்சியினர் மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றி வந்தார்கள்.
அப்போது தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக மக்கள் மத்தியில் இருந்தே நாங்கள் தகுதியானர்களைத் தெரிவு செய்தோம்.
ஆயினும் பின்னர் அப்போது ஏற்பட்டிருந்த சூழலில் பொதுமக்கள் மத்தியில் இருந்தும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது கடினமான காரியமாக இருந்தது.
அரசியலுக்குள் வருவதற்கு அவர்கள் அச்சமடைந்திருந்தார்கள். அப்போது தான் நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தி தேர்தலில் மக்களின் ஆரவைப் பெற்று 3 பேரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தோம்.
பின்னர் ஏற்பட்ட சூழல் மாற்றம் காரணமாக தேர்தலில் மக்களின் ஆதரவை நாங்கள் பெற முடியாமல் போயிருந்தது. அதற்கு அன்றிருந்த அரசியல் சூழலே முக்கிய காரணமாகும்.
நீண்ட இடைவெளியின் பின்னர் வட மாகாண சபைக்கு என்னையும் சேர்த்து 3 பேரை மக்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்து அனுப்பினார்கள்.
அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் ஒருவரை மக்கள் தெரிவு செய்தார்கள். இப்போது மீண்டும் என்னை மக்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளார்கள்.
வவுனியாவில் குறிப்பாக வன்னிப்பிரதேசத்தில் என்னை மக்கள் தங்களுடைய பிரதிநிதியாகத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்து நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்ற பொது மக்களுடைய விருப்பத்தையடுத்து கடந்த முறை யாழ்ப்பாணத்தில் மக்கள் என்னைத் தெரிவு செய்துள்ளார்கள்.
அந்த வகையில் வடமாகாணத்தில் வன்னியிலும், யாழ்ப்பாணததிலும் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதியாக என்னால் பணியாற்ற முடிந்திருக்கின்றது.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அதேவேளை, எமது மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்றத்தக்க வகையிலான தீர்வு ஒன்றை எட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
அரசியல் தீர்வு கண்டால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடும். ஆகவே, ஏனைய பிரச்சினைகளில் ஏன் கவனம் செலுத்துகின்றீர்கள் என கேட்பவர்களும் இருக்கின்றார்கள்.
அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், அரசியல் தீர்வு காண்பதும் சமாந்தர முயற்சிகளாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்த வகையிலேயே புதிய அரசாங்கம் அரசியலமைப்பில் மாற்றம்கொண்டுவருவதனூடாக ஓர் அரசியல் தீர்வை எட்டிவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திடமாக நம்புகின்றார். அதேபோன்று மக்களிடமும் அந்த நம்பிக்கை உருவாகியிருக்கின்றது.
இந்தச் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக அரசியல் ரீதியாக அர்த்தபுஷ்டியுள்ள வகையில் செயற்பட வேண்டும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்குள்ளேயே தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி மாறுகின்ற நடவடிக்கைகளுக்குக் கட்சித் தலைமைகள் இடம் கொடுக்கக் கூடாது.
சரியோ, பிழையோ இந்த அழிவுகளுக்கு எல்லாம் நாங்களும் ஒரு காரணமாக இருக்கின்றோம். இந்த போராட்டத்தை ஆரம்பித்த ஒவ்வொருவரும் இந்த அழிவுகளுக்கு காரணமானவர்கள் தான்.
யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கும், அரசியல் நிலைமைகளுக்கும் அன்று ஆயுதப் போராட்ட அரசியலில் ஈடுபட்டு இன்று உயிர் தப்பியுள்ளவர்களும் பொறுப்பு கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்.
ஆயுதப் போராட்ட அரசியலில் ஈடுபட்டமைக்குக் காரணங்கள் இருந்தன. ஆனால் இயக்கங்களிடையே ஏற்பட்ட மோதல்கள் அழிவுகளையே ஏற்படுத்தியிருந்தன.
உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற ஆயுதப் போராட்ட அரசியலிலும், இத்தகைய இயக்க மோதல்கள் இருக்கத் தான் செய்தன.
ஆயினும் தலைவர்கள் மட்டத்தில் அந்தப் பிணக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு பின்னர் அவர்கள் ஒற்றுமையாகப் போராடியிருக்கின்றார்கள்.
எனவே, இயக்க மோதல்கள் என்பது இலங்கையில் மாத்திரம் நிகழ்ந்ததல்ல. ஆனாலும், அவற்றுக்குத் தலைவர்கள் மட்டத்தில் தீர்வு காண முடியாமல் போனது துரதிர்ஷ்டமாகும்.
ஆயுதப் போராட்ட அரசியல் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் செல்வாக்குள்ள அரசியல் தலைமையாக இருக்கின்றது.
அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தனை மக்கள் மதிக்கின்றார்கள். சர்வதேசமும் மதிக்கின்றது. முக்கியமாக அரசாங்கமும் அவர் மீது அதிக மதிப்பு வைத்திருக்கின்றது.
ஆகவே, அவருடைய தலைமையைப் பலப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசியல் தீர்வு காண்பதற்கும் ஆக்கபூர்வமான முறையில் செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படத் தவறினால், அடுத்த தலைமுறையின் பழிச் சொல்லுக்கு நாங்கள் ஆளாக நேரிடும் என்று தெரிவித்தார்.
-http://www.tamilwin.com