தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவந்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர்களின் நம்பிக்கையினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பாடசாலையில் ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் அளவில் வீழ்ச்சி நிலையேற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் எமது இனத்தினை கருவறுத்ததே எமது இனம் அருகிச்செல்வதற்கு காரணமாக அமைந்தது.
தமிழர்களின் கல்வி நிலைகள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் 15ஆண்டுகளில் உயர் அதிகாரிகள் உருவாகுவதற்கான வீழ்ச்சி நிலையை எமது சமூகம் எதிர்நோக்கியுள்ளது.
தமிழ் மாணவர்கள் கல்வி நிலையில் வீழ்ச்சி நிலையில் சென்றுகொண்டுள்ளனர்.இன்று பாடசாலை இடைவிலகலை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய சமூகங்களை விட தமிழ் சமூகத்தில் அதிகரித்துள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்கள் இடைவிலகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையினை மாற்றவேண்டும். தமிழர்களின் கல்வி நிலையினை மேம்படுத்தவேண்டிய கடப்பாடு இன்று அனைவருக்கும் உள்ளது. இதற்காக அனைத்துவேறுபாடுகளையும் களைந்து ஒன்றுபடவேண்டிய தேவையுள்ளது.
இந்த நாட்டின் ஆட்சிமாற்றம் ஊடாக தமிழர்களுக்கு நல்ல தீர்வு ஒன்றுகிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். இன்று தென்னிலங்கையில் அதிருப்திகரமான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுவருகின்றது.
தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவந்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர்களின் நம்பிக்கையினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களது ஆட்சியை தக்கவைப்பதற்காக சிங்கள மக்களிடம் தமிழர்களின் அபிலாசைகளை ஒதுக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களில் தமிழ் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு அச்சம்கொள்ளும் இந்த அரசாங்கம் எவ்வாறு தமிழர்களுக்கு தீர்வொன்றை வழங்கப்போகின்றார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்.
நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு வழங்கும் தீர்வினை வழங்கவேண்டும். எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒத்துழைக்கவேண்டும். இல்லாதுபோனால் எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பினையே நல்லாட்சி அரசாங்கமும் எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும்.
எமது சமூகம் எமது கல்வியை மீண்டும் தழைத்தோங்க செய்ய அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.எமது கல்வியை வளர்ப்பதற்கு சுயநலமற்ற சேவையினை செய்வதற்கு ஆசிரியர்கள், அதிபர்கள் முன்வரவேண்டும்.
மட்டக்களப்பு நகரில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் தனது தனிப்பட்ட நன்மைக்காக அந்த பாடசாலையின் விளையாட்டு நிகழ்வுக்கு பேரினவாத கட்சியொன்றின் அமைப்பாளரை பிரதம அதிதியாக அழைத்துள்ளார்.
இன்று மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சி தொடர்பில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சில அதிபர்கள் இவ்வாறு தங்களது தனிப்பட்ட தேவைக்காக பாடசாலை சமூகத்தினை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இங்கு தெரிவித்தார்.
-http://www.tamilwin.com