ஈழத் தமிழருக்கு இழைத்த அநீதிகளுக்காக அல்ல!

elam_001ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மஹிந்த ராஜபக்ஸ நடத்திய கொடூர இனக்கொலையை இந்த உலகமே அறியும்.

முப்பதாண்டுகளாக ஒடுக்கப்படும் ஈழ மக்களின் உரிமையை நிலைநாட்ட தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழ் மக்களையும் கொன்றழித்து தனி ஈழப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்றிகளில் கொடூரமாக செயல்பட்டார்.

அப்படிபட்ட மஹிந்த ராஜபக்ஸ  தனக்கு தோல்வியில்லை என்று நினைத்தார். தனது ஆட்சிக்கு வீழ்ச்சியில்லை என்று நினைத்தார்.

நெடுநாள் ஆட்சி புரிவதும் அதன் பின்னர் வரிசையில் தனது ராஜபக்ஸ சந்ததி தொடர்ந்து அதிகாரத்தை கைவசம் வைத்திருக்கும் என்ற சிந்தனையின் ஊடாக மஹிந்த ராஜபக்ஸ மன்னராட்சியில் ஈடுபட்டார்.

மஹிந்த ராஜபக்ஸவின்  கனவை 2015 ஜனவரியில் நடந்த தேர்தலில் ஈழ மக்கள் சிதறடித்தனர். அதன் பின்னர் பிரதமர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு  தோல்வி.

ஆனாலும் அதிகாரத்தின் மீதான மோகத்தை கைவிட மஹிந்த ராஜபக்ஸ  தயாரில்லை. தொடர்ந்து எம்.பி யாக பதவி வகிக்கும் ராஜபக்ஸ ஆட்சியை கைப்பற்றும் வகையிலான தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இப்போது இலங்கையின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஸ வேட்டையை நடத்தி ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

ராஜபக்ஸ வேட்டை தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும் அது எந்த நோக்கத்தில், எப்படி நிறைவேற்றப்படுகின்றது என்பதுதான் அதிர்ச்சியானது.

இது ராஜபக்ஸ ஈழத்தழிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக நடைபெறும் வேட்டையல்ல. ராஜபக்ஸ அதிகாரத்தை நெருங்கவிடாமல் அவர் காலத்தில் இழைத்த ஊழல்களை முன்வைத்த வேட்டை.

இந்த வாரம் இலங்கை அரசியலில் பெரும் கொந்தளிப்பு. மஹிந்த ராஜபக்ஸவின் இளைய மகன் யோஷித ராஜபக்ஸவை மைத்திரி அரசாங்கம் கைது செய்திருக்கின்றது.

தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த மஹிந்த ராஜபக்ஸ  கண்ணீர் விட்டார். ஈழத் தமிழ்ர்களின் இரத்தத்தில் போர் வெற்றியாட்டிய மஹிந்த ராஜபக்ஸ கண்களில் இருந்து முதன் முதலில் கண்ணீர் வந்திருக்கிறது.

நிலை குலைந்து போன மஹிந்த ராஜபக்ஸ புலம்பத் தொடங்கிவிட்டார். ஈழத்தில் உள்ள அப்பாவி பிள்ளைகளை எல்லாம் கொன்றும், காணமல் போகச்செய்தும் எங்கள் மாநிலத்தின் தாய்மார்களை, தந்தைமார்களை கண்ணீரோடு அலையவிட்ட மஹிந்த ராஜபக்ஸ இப்போது சிந்திக்க தொடங்கியுள்ளார்.
ஈழத் தாய்மாரின் சாபம் இன்னும் மஹிந்த ராஜபக்ஸவை சரியாக நெருங்கவில்லை. மஹிந்த ராஜபக்ஸவின் அநியாயங்களுக்கு தண்டனை கண்ணுக்கு முன்னாலேயே நடக்கிறது.

புலிகளின் இயக்கத்திற்கு புலம்பெயர் மக்கள் அளிக்கும்  நிதி உதவியை தடை செய்ய 2006இல் கறுப்பு பணச்சலவை என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

மஹிந்த ராஜபக்ஸ கொண்டு வந்த அந்த சட்டமே இன்று அவரின் புத்திரரை சிறையில் தள்ளியிருக்கிறது. கடற்படை அதிகாரியாக இருக்கும்   யோஷித ராஜபக்ஸ எப்படி வர்த்தகத்தில் ஈடுபட முடியும்? என்றும் அவருக்கு 23 மில்லியன் அமெரிக்க டொலர் எப்படி கிடைத்தது என்றும் கேட்டே யோஷித கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன செய்தாலும் ராஜபக்ஸகளை அடக்க முடியாது என்று கூறி தோல்வியை வெளிப்படுத்துகிறார் மஹிந்த ராஜபக்ஸ.

அடுத்தது தன் மனைவியை சிறையில் போடுவாரகள். பிறகு தன்னை சிறையில் போடுவார்கள் என்றும் மஹிந்த ராஜபக்ஸ ஊகம் வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் குற்றத்திற்காக சிறையில் தள்ளும் ஏற்பாடே நடைபெறுகிறது. புலிகளுக்கு நிதி வழங்கிய தேசதுரோகி என மஹிந்த ராஜபக்ஸவை சிறையில் தள்ளுவதே தமது ஆடசிக்கு பாதுகாப்பானது என்பதும் இலங்கை அரசின் திட்டம்.

மஹிந்த ராஜபக்ஸ தமிழர் மீது நடத்திய இனப்படுகொலையை இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான புனித யுத்தமாகவே கருதுகிறார்.

மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக்குற்றவாளியாகவோ, இனப்படுகொலையாளியாகவோ நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லை.

இதனை சிங்கள மக்கள் மத்தியில் அதிபர் மைத்திரபால சிறினேவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சத்தியம் செய்திருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக தண்டிக்கப்பட வேண்டியவரே. அத்தோடு ஒரு தேசத்தை அழித்த ஒரு இனத்திற்கு, மனித குலத்திற்கு விரோதமான குற்றங்களை இழைத்த மஹிந்த ராஜபக்ஸ அதற்காகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்.

ஊழலுக்காக தண்டிக்கப்படும் மஹிந்த ராஜபக்ஸ மனித குலத்திற்கு விரோதமான கொடுஞ்செயல்களுக்காகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்.

ஆனால், தமிழர் விடுதலைக்காக போராடிய புலிகளை ஒடுக்கி ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த பேரினவாத இனப்படுகொலை யுத்தத்தை ”பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”  என்று கூறும் வரலாற்று தவறை, அநீதியை பாதுகாத்துக் கொண்டு வெறும் ஊழல்வாதியாக மஹிந்த ராஜபக்ஸவின் வரலாற்றை எழுதுவதும், அவரை தண்டிப்பதும் ஈழத் தமிழர் போராட்டத்தில் பெரும் பின்னடைவை, விளைவை ஏற்படுத்தும்.

-http://www.tamilwin.com

TAGS: