ஈராக் நாட்டில் மேற்கத்திய இசையை ரசித்த குற்றத்திற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செயலுக்கும் கண்டனம் எழுந்துள்ளது.
ஈராக் நகரில் உள்ள மோசூல் என்ற நகரில் அய்ஹாம் ஹுசைன்(15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான்.
தந்தை ஒரு வியாபாரி என்பதால், அவரது கடைக்கு சிறுவன் அடிக்கடி சென்று தந்தைக்கு உதவி வந்துள்ளான்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னால் தந்தையின் கடைக்கு சென்ற சிறுவன், மேற்கத்திய இசையை ’CD Player’-ல் ரசித்து கேட்டுள்ளான்.
மோசூல் நகரம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தீவிரவாதிகள் இதனை கண்டு கொதித்தெழுந்து சிறுவனை கைது செய்து ஷரியா சட்டங்களுக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
’’மேற்கத்திய கலாச்சரம் என்பது இஸ்லாமியத்திற்கு எதிரானது. தொலைக்காட்சி பார்ப்பது, மேற்கத்திய இசையை கேட்பது உள்ளிட்டவைகள் கடும் தண்டனைக்கு உள்ளானது.
எனவே, இஸ்லாமியத்திற்கு எதிராக செயல்பட்ட சிறுவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக’ தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பு வெளியானதும், சிறுவனின் கண்கள் கட்டப்பட்டு கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டான்.
பின்னர், நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அந்த உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கத்திய இசையை கேட்டதற்காக அப்பாவி சிறுவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளால் மோசூல் நகரில் 15 வயது சிறுவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com