கென்யா நாட்டில் உள்ள விலங்குகள் பூங்காவிலிருந்து 4 சிங்கங்கள் தப்பி அருகில் உள்ள தலைநகருக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தலைநகரான நைய்ரோபிக்கு மிக அருகில் உள்ள கென்யா தேசிய விலங்குகள் பூங்காவில்(KWS) இருந்து இன்று காலை ஒரு பெண் சிங்கம் உள்ளிட்ட 4 சிங்கங்கள் தப்பி தலைநகருக்குள் நுழைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டவுடன், பொலிசார் மற்றும் வேட்டைக்காரர்களின் உதவியுடன் ஹெலிகோப்டரில் தப்பிய சிங்கங்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
விலங்குகள் பூங்காவை சேர்ந்த பாதுகாவலரான Paul Udoto என்பவர் கூறுகையில், 4 சிங்கங்களும் மிகவும் கொடூரமானவை. சிங்கங்களை பொதுமக்கள் பார்த்தால், அதன் அருகில் யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம், மூதாட்டிகள் மற்றும் குழந்தைகள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டிற்குள் பாதுகாக்குமாறும் அவசர தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் சிங்கங்களை துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதற்கான ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
விலங்குகள் பூங்காவில் இருந்து 4 சிங்கங்கள் தப்பியதாக கூறப்பட்டாலும், 6 சிங்கங்கள் வரை கூட தப்பியிருக்கலாம் என உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகருக்கு அருகில் உள்ள இந்த விலங்குகள் பூங்காவில் அதிகாரப்பூர்வமாக 30 சிங்கங்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com