அகதிகள் முகாமில் கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு: மகிழ்ச்சி ஆரவாரமிட்ட பொதுமக்கள்

refugee_fire_001ஜேர்மனியில் சாக்சனி பகுதி அகதிகள் முகாமில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு சுற்றும் கூடி நின்ற குடிமக்கள் மகிழ்ச்சி ஆரவாரமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு நெருப்பு கொழுந்துவிட்டு எரியத்துவங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் பொலிசார் கடுமையாக போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் நெருப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததினால் நெருப்பு பற்றிக்கொண்ட பகுதி முழுதும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் முடிவில் அகதிகளுக்கு எதிராக செயல்படும் கும்பலால் திட்டமிட்டே நெருப்பு மூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அகதிகள் முகாம் தீப்பற்றி எரிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கும்பல் ஒன்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர் தீயணைப்புப்படையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அகதிகளுடன் புறப்படவிருந்த பேருந்து ஒன்றை தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று, அகதிகளுக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

தற்போது அகதிகள் முகாமை திட்டமிட்டே நெருப்பு வைத்துள்ளனர். இந்த இரு நிகழ்வையும் வன்மையாக கண்டித்துள்ள சாக்சனி ஆளுநர், அதிர்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

-http://world.lankasri.com