வருட இறுதிக்குள் தீர்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்!

selvam-m.pமஹிந்தவும் அவரது ஆதரவு அணியினரும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை திசைதிருப்பலாம் என்பதாலேயே தமது இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இன்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே செல்வம் அடைக்கலநாதன் எம்பி இதனைக் கூறினார்.

நீண்டகாலமாக இழுபட்டுவரும் இனப்பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வொன்றைப் பெற்றுகொடுக்க வேண்டும் என்ற தெட்டத்தெளிவான நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரிக்கும் கட்சி அல்ல. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பிடம் இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டம் இல்லை. அது மக்களை ஏமாற்றி வருகிறது என எமது இனத்தைச் சேர்ந்தவர்களே விமர்ச்சித்து வருகின்றனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு இருப்பதுடன், இது குறித்த யோசனைத் திட்டமும் உள்ளது. இதனை மேடைகளில் பகிரங்கப்படுத்துவதானது, மஹிந்தவுக்கும் அவருடைய ஆதரவு அணியினருக்கும் சாதகமாக அமைந்துவிடும்.

அதனைப் பயன்படுத்தி அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வார்கள் என்பதனாலேயே இராஜதந்திர ரீதியாக கூட்டமைப்பின் இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதாகவும் கூறினார்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பேச்சுக்களை ஆரம்பிக்கும் போது கூட்டமைப்பின் திட்டங்கள் முன்வைக்கப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் சுயமாக வாழக்கூடியதாக தீர்வு அமைய வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

மாகாண சபை என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல. அது தீர்வுக்கான அடித்தளமாகும். மாகாண சபைக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் தீர்வாக அமையாது. மாகாண சபைகளிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் மாத்திரமன்றி மாகாண சபைகளிலிருந்து பெறப்பட்ட சகல அதிகாரங்களும் மீள வழங்கப்பட வேண்டும். இதுவே அரசியல் தீர்வுக்கு அடித்தளமாக அமையும்.

இனப்பிரச்சினைத் தீர்வொன்றை இவ்வருடத்துக்குள் பெற்றுக்கொடுப்பதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக உழைத்து வருகிறது.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை கைவிட்டுவிட்டு புதிய அரசாங்கத்துடன் இணைந்து கூட்டமைப்பு செயற்படுவதாக விமர்சிக்கப்படுகிறது. கூட்டமைப்பு எதற்கும் சோரம் போகாது என்பதை அவர்களுக்குக் கூற விரும்புவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

மக்களை அடமானம் வைத்து, அவர்களின் முதுகளில் ஏறி சவாரி செய்யும் வகையில் கூட்டமைப்பு ஒருபோதும் செயற்படாது என்றும் கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: