பறை தமிழினத்தின் தொன்மையான அடையாளம். ஆதித் தமிழ்ச்சமூகத்தின் தகவல் தொடர்பு சாதனம். நாடி நரம்பெங்கும் முறுக்கேற்றும் அந்தப்பறை அரசியல் தொடங்கிப் பண்பாடு வரை தமிழ்மக்களின் சகல வாழ்வியற் தளங்களிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாய் மீளவும் ஓங்கி ஒலிக்கட்டும் என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் என்டர்டெயின்ற்மென்ற் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு புத்தர் கலைக்கூடத்தைச் சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட பறை இசை நடனப் பயிற்சியின் இறுதிநாள் நிகழ்ச்சி நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பழந்தமிழர் வாழ்வில் அரச கட்டளைகளை, அறிவித்தல்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பிக்கும் ஊடமாகப் பறை பயன்பட்டது. தோலிசைக் கருவிகளின் தாயான பறை, மனதுக்கு ஊக்கமளிக்கும் அற்புதமான ஒரு இசைக்கருவியாகவும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
ஆனால், பிற்காலத்தில் பறை மரணச்சடங்குகளில் மாத்திரமே ஒலிக்கும் ஒரு கருவியாகவும், குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கருவியாகவும் மாற்றம் பெற்றுவிட்டது.
இந்தத் தவறான அணுகுமுறையால் பறை வழக்கொழிந்து வருகிறது. இது துரதிர்ஷடமானது. பறை குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டத்தினருக்கு உரியது அல்ல. இது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தினதும் முகம்.
பறை இசை நடனப்பயிற்சி பெற்ற இளைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ஆனால், இந்தக் கலையைப் பயின்றிருக்கிறோம் என்ற சுயதிருப்தியுடன் மட்டும் இவர்கள் தங்களை மட்டுப்படுத்திவிடக்கூடாது.
இதனை முகநூல் நட்பு வட்டத்தில் பகிர்ந்துகொள்வதுடன் மாத்திரம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. கலை மக்களுக்கானது. அதுவும், பறை அடித்தட்டு மக்களுக்கான ஒரு எளிய கலை வடிவம்.
இதனை வெகுசனங்களிடையே எடுத்துச் செல்வதற்கு இங்கு பயிற்சிபெற்றமாணவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com