திருடன் ஒருவன் திருடும் போது அவனை தேடி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கின்றது.
எனினும், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து வழங்க வேண்டும் என்ற பொறுப்பு அந்த சட்டத்திற்கு இல்லாமல் போனது ஏன் என காணாமல் போனவரின் மனைவி ஒருவர் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் முன் கருத்து தெரிவிக்கும் போது கேள்வியெழுப்பினார்.
பத்மஸ்ரீ ஜெயதீபா என்னும் பெண்னே அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் முன்பாக இந்த கேள்வியை எழுப்பினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
எனது கணவர் காணமல் போன போது நான் பல இடங்களில் தேடினேன் இதுவரையில் கிடைக்கில்லை.
ஒரு நாய்க்குட்டி காணாமல் போகும் போது அருகில் உள்ளவர்களும் இணைந்து தேடுவோம்.ஒரு மாடு காணமல் போனாலும் மாடு வளர்க்கும் பலர் இணைந்து தேடுவார்கள்.
இன்றுவரைக்கும் எனது கணவரைக் காணவில்லை. இதேபோன்று பலர் பலரை காணவில்லையென தேடுகின்ற போது இலங்கையில் உள்ள யாப்பில் அனைவரும் இணைந்து தேடுவதற்கான சட்டம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவ்வாறான பொறிமுறை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட வேண்டும்.
ஒருவர் காணமல் போனால் அவர் ஒருவருடத்திற்கு திரும்பி வரவில்லையென்றால் மரணச் சான்றிதழ் பெறலாம் என்று கூறப்படுகின்றது. ஆனால் அது எங்கு சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியாது.
எமது பிள்ளைகள் அப்பா எங்கே என்று கேட்கும் போது மரணச் சான்றிதழையா நாங்கள் தந்தைக்கு பதிலாக காட்டுவது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
உரிமையினைப் பற்றி கதைக்கின்றோம், வாழ்க்கையினைப் பற்றி கதைக்கின்றோம், மதத்தினைப் பற்றி கதைக்கின்றோம். கணவன், மனைவியாக குடும்பமாக வாழ வேண்டும் என்பது பற்றி யாரும் கதைப்பதில்லை.
அதற்கான மாற்றத்தினைக் கொண்டு வருவது தொடர்பில் யாரும் சிந்திப்பதில்லை.
திருடன் ஒருவன் திருடும் போது அவனை தேடி கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளபோது காணாமல் போனவர்களை கண்டுபிடித்து வழங்க வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல் போனது ஏன் என்பது புரியாத விடயமாகவே உள்ளது.
ஒரு மிருகம் காணாமல் போகும் போது அதனைத் தேடுவதற்கு அயலர்கள் செல்லும் போது ஒரு மனிதன் காணாமல் போனால் அவரை தேடுவதற்கு யாரும் கூட வருவதில்லை. அதற்கு காரணம் நாட்டின் சூழ்நிலையாகும்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு விசாரணைக்கான தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி என்.செல்வராஜன், சட்டத்தில் இந்த பொறுப்புக் கூறல் உள்ள போதிலும் கடந்த காலத்தில் அந்த பொறுப்புக் கூறல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com

























