நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்!

ranil_maithri_sampநாட்டில் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காண்பது தொடர்பாக அவ்வப்போது நம்பிக்கைதரும் சமிக்ஞைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்வுத் திட்டத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் என்பது தொடர்பில் இதுவரை தெளிவில்லாத தன்மை காணப்படுகின்றது.

அரசாங்கத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றது. சர்வதேசத்திற்கும், உள்நாட்டிற்கும் இது தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கின்றது. ஆனால், அதற்கான அடிப்படை வேலைத்திட்டங்கள் இதுவரை முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மற்றும் தமிழர்களை பிரிக்காத தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

எமது மக்களின் அபிலாசைகளை தீர்க்காத எந்த ஒருதீர்வையும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் அந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு பெரும்பான்மையை பெறக்கூடிய சூழல் பாராளுமன்றில் நிலவுவதாகவே நான் கருதுகின்றேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டைப் பிரிக்காமல் ஒருமித்த நாட்டிற்குள் ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு சாத்தியமான நிலைமை காணப்படுகின்றது. தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பகுதிகள் உள்ளடங்கியதாக தீர்வுத் திட்டம் அமைய வேண்டும்.

வடக்கு, கிழக்கு என்ன விதமாக இருந்ததோ? அவ்விதமாக அந்த மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும். நாட்டைப் பிரிக்கும் படியாக நாங்கள் கேட்கவில்லை. ஆனால் தமிழர்களைப் பிரிக்கக்கூடாது. பிரிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலைமை இருக்க வேண்டும். அவ்விதமான தீர்வைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். அதனை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கு எவ்வாறான தீர்வுத்திட்டம் அவசியம் என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மிகவும் தெளிவான முறையில் விளக்கிக் கூறியுள்ளார். இரா. சம்பந்தன் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் முக்கிய சில விடயங்களை கூறியிருந்தார்.

அதாவது 2016ம் ஆண்டுக்குள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுத் திட்டமொன்று கிடைக்குமென்று அவர் தேர்தலுக்கு முன்னரே நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அந்த வகையிலேயே தற்போது மீண்டும் 2016ம் ஆண்டுக்குள் தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ளார்.

அதாவது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு தற்போது அருமையான சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது. வரலாறு முழுவதும் எதிரிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை தற்போது நிறுவியுள்ளன.

இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தேசிய இணக்கப்பாடு ஒன்றை இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்.

விசேடமாக கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது இனப்பிரச்சினையை தீர்க்க முற்பட்ட சந்தர்ப்பங்களில் அதனை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்த்து வந்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த போது இனப்பிரச்சினையை தீர்க்க முற்பட்ட சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்து வந்துள்ளது.

இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்தே வந்துள்ளன. இதுவே வரலாறாக பதிவாகியுள்ளது. இதனால், இதுவரை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழல் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி பிரதான எதிர்க்கட்சிப் பதவியிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமர்ந்துள்ளது.

எனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அரசாங்கம் என்ற ரீதியில் ஒரு தீர்வுத்திட்டத்தை கொண்டுவரும் போது அது தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யுமாக இருந்தால் எதிர்க்கட்சியிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆதரவு வழங்கும்.

அவ்வாறு பார்க்கும்போது சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணக்கூடியதற்கான சிறந்த அரசியல் சூழல் தற்போது உருவாகியுள்ளது என்றே கூறவேண்டும். அந்த அரசியல் சூழலில் குழப்பங்கள் ஏற்படாமல் உரிய முறையில் உச்சபட்ச பயனைப் பெறுவதே தற்போதைய தேவையாக உள்ளது.

விசேடமாக தீர்வு என்று வரும்போது அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, ஒற்றையாட்சி, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விவாதத்திற்கு உட்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் சமஷ்டி என்றவுடன் தென்னிலங்கையில் ஒருவித அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது.

அதேவேளை, ஒற்றையாட்சி என்றதும் தமது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற நியாயமான சந்தேகம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. எனவே, இந்த இரண்டு விடயங்களும் மிகவும் கவனமாக கையாளப்படவேண்டியவையாகும்.

இவை தொடர்பில் முதலில் தெளிவான விளக்கங்களை பெற்றுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். விசேடமாக தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்த்துக்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் தமது ஆதரவை வழங்கவேண்டும்.

தற்போது காணப்படுகின்ற அரசியலமைப்பில் 13 ஆவது திருத்த சட்டம் உள்ளடக்கப்பட்ட போதிலும், அதிலுள்ள காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை மாகாணங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளன. இது தொடர்பில் பல்வேறு மட்டங்களில் வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் அதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை.

இந்நிலையில் அண்மையில் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டிலான் பெரேரா மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் தொடர்ந்தும் இந்த விடயத்தில் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

விசேடமாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்வைக் கண்டுவிட வேண்டுமென்றும் அடுத்த பாராளுமன்றத்திற்கு இந்தப் பிரச்சினையை விட்டுவைக்கக் கூடாது என்றும் அமைச்சர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை முன்வைக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக பிரதான எதிரெதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தின் அவசியத்தை தென்னிலங்கை தலைவர்கள் உணர்ந்து கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே, இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி விரைவாக அரசியல் தீர்வுத்திட்டமொன்றை காண்பதற்கு அனைத்துத்தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

நாங்கள் ஒருபோதும் நாட்டைப் பிரிப்பதற்கு முயற்சிக்கவில்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தையே கோரிநிற்பதாகவும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மிகவும் தெளிவாக தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அறிவிப்பானது தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் நல்லெண்ணமிக்க சமிக்ஞையாக கருதப்படுகிறது. எனவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக்கண்டு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்வதற்கும் தென்னிலங்கைக்கும் சிறந்த சர்ந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதைப் போன்று இந்த வருடத்தில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நிவர்த்திக்கக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படுமென்று அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

எனவே, அதனை நோக்கியதாக அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: