தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

jaffnaஇலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுஜன அமைப்புகள் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தினால் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வவுனியா மேல் நீதிமன்றம் தமிழ் பெண் ஒருவரை விடுதலை செய்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான மு.கோமகன் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டே வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக குறிப்பிட்டதுடன் சிறையில் உள்ள எவரும் சுயவிருப்பத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஏதாயினும் பொறிமுறை ஒன்றின் ஊடாக தம்மை விடுதலை செய்யுமாறு தமிழ்க் கைதிகள் அரசாங்கத்தை எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று விடுதலை செய்யப்பட்ட பெண்ணுடன் கைது செய்யப்பட்டிருந்த மற்றுமொருவருடைய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு நீதவான் ஒருவரே பதிவு செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின்போது அந்த நீதவான் குறுக்கு விசாரணை செய்யப்பட்டதையடுத்து, இந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கு நீதவானால் பதிவு செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை போதிய ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் நிராகரித்து அந்தப் பெண்ணை விடுதலை செய்துள்ளது என்றார் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்.

உதவி காவல்துறை அத்தியட்சகர் தரத்திலான அதிகாரி ஒருவரினால் மட்டுமல்ல, நீதவான் ஒருவரினால் பதிவு செய்யப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடத்த முடியும் என்ற நிலையை இந்தத் தீர்ப்பு மழுங்கடித்துள்ளது என்றார் ரட்ணவேல்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலவேராக உள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எந்த ரீதியிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை இந்த வழக்கின் தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது என்றார் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல். -BBC

TAGS: