டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்ற அந்தஸ்தை இஸ்லாம் இழக்கக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வங்கதேசம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தம் செய்யப்பட்டு வங்கதேசம் ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் வசிப்போரில் 90 சதவீதம் பேர் முஸ்லீம்கள்(சன்னி), 8 சதவீதம் பேர் இந்துக்கள், 2 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா முஸ்லீம்கள்.
வங்கதேசத்தில் இந்துக்கள், ஷியா முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் மீது சன்னி முஸ்லீம்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் பஞ்ச்கார் மாவட்டத்தில் கோவில் ஒன்று தாக்கப்பட்டதுடன், பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் எழுத்தாளர்கள், பிளாக்கர்கள் அடிக்கடி கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்நிலையில் வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் இருக்கக் கூடாது என்று கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மத அந்தஸ்தை இஸ்லாம் இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.