பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என ஐ.நா.வில் உறுதியளித்த அரசு; அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது முரணானது: சம்பந்தன்

sampanthan (1)பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதியளித்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்,

அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்னமும் தடுத்துவைத்துள்ளமையானது நியாயமற்ற செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் விவகாரத்தை கையாள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் அரசாங்கத்திடம் இருக்கும் திட்டம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், சரியான விடயங்களை செய்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. நம்பிக்கையற்ற தன்மையிலேயே அது இருக்கின்றது. எனவே, இனியும் இந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டிருக்கமுடியாது.

இயல்புநிலை திருப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இது பெரும் சிக்கலாக இருக்கின்றது. ஆகவே, காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பலவந்தமான காணாமற்போதல்களுக்கான போதிய சாட்சியங்கள் இருக்கின்றன என்று நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் அரச அதிகாரியினால் கைதுசெய்யப்படாலோ அல்லது சரணடைந்தாலோ அந்த நபரின் பாதுகாப்பு பொறுப்பு அரசுக்குரியது என்றும் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்பது பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களது உறவினர்களுக்கு இருக்கின்றது. ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் மேற்படி பரிந்துரைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. இவற்றை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் எவை?

அத்துடன், காணாமற்போனோர் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவுக்கும் 17 ஆயிரத்து 329 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவை பற்றி காத்திரமான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். குற்றவாளிகளோ சுதந்திரமாக நடமாடுகின்றனர். கடந்த ஆட்சியின்போது என்ன நடந்தது என்பது இரகசியமில்லை. அனைவரும் அதை அறிவர். எனவே, புதிய அரசாங்கத்திலாவது மனிதாபிமானத்துடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் நியாயமானவை. கடந்த அரசாங்கம் இவை பற்றி அக்கறை காட்டவில்லை. எனவே, மக்களால் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்திடம் இருக்கும் திட்டம் என்ன?

மக்களின் சாட்சியங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை செய்வதற்குரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. இதன்படி, உண்மை, நீதி, இழப்பீடு ஆகிய விடயங்களை நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இவற்றை நிறைவேற்றுவதற்கு செய்யப்பட்டுள்ள விடயங்கள் எவை?

காணாமற்போனோர் தொடர்பில் காணாமற்போனோர் சான்றிதழ் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மரணச்சான்றிதழில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இந்தச் சான்றிதல் ஊடாக நஷ்டஈடு மற்றும் காணாமற்போனோருக்கு உரித்துடைய ஏனைய விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும். காணாமற்போனோர் தொடர்பில் தமது திட்டம் என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். இது அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையும்.

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சமூக குற்றச்சாட்டுக் கொண்டவர்கள் கிடையாது. அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும், தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 90 சதவீதமானோர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாதவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ் கைதிகளுக்கு மட்டும் பாகுப்பாடு காட்டப்படுவது ஏன்? இவ்வாறானநிலையில் எப்படி நல்லிணக்கம் ஏற்படும்? பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அந்தச் சட்டத்தின்கீழ் எப்படி தடுத்து வைக்க முடியும்? எப்படி தண்டிக்க முடியும்? கடந்த ஆட்சியின்பொது முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஏன் தயக்கம் காட்டவேண்டும்? சரியான விடயங்களை செய்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டக்கூடாது. சரியானவற்றை செய்வதற்குதான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: