ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒத்துக் கொண்டார்.. சோல்ஹீம்

rajiv-gandhiலண்டன்: விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சோல்ஹீம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “To End A Civil War” என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது. அந்த நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தனக்கு இருந்த தொடர்புகள், பாலசிங்கம், பிரபாகரன் உள்ளிட்டோர் குறித்து விவரித்துள்ளார் சோல்ஹீம். பாலசிங்கம் குறித்து அவர் விரிவாகவே எழுதியுள்ளார்.

சோல்ஹீ்ம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து பாலசிங்கத்திடம் முதலிலேயே தெரிவிக்கவில்லை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன். ராஜீவ் காந்தி மே 21, 1991ல் கொல்லப்பட்டார். அதன் பிறகு சில வாரங்கள் கழித்தே பிரபாகரனும், பொட்டு அம்மானும், பாலசிங்கத்திடம் விவரத்தைக் கூறியுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை குறித்து நான் பின்னர் பாலசிங்கத்திடம் கேட்டபோது, விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு இது என்று உடனடியாக ஒத்துக் கொண்டார். மிகப் பெரிய வரலாறு என்று அவர் திரும்பவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இது ஒட்டுமொத்த சீரழிவு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை என்றும் கூறினார் பாலசிங்கம்.

இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் அமைதிப் பணிக்காக வந்த இடத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்த நிலையில் 91 தேர்தலில் மீண்டும் ராஜீவ் வென்று ஆட்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அப்படி நடந்தால் அவர் மீண்டும் படையை அனுப்பலாம். அது தங்களுக்கு பாதகமாக அமையும் என்று பிரபாகரன் எதிர்பார்த்தார். இதனால் ராஜீவ் காந்தியைக் கொல்லும் முடிவை அவர் எடுத்தார்.

சோல்ஹீம் மேலும் கூறுகையில், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளை பாலசிங்கம் ஏற்படுத்தி வந்தாலும் கூட, இந்தியா மீதுதான் அவருக்கு தனிப் பிரியம் இருந்தது.

அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தை கடுமையாக விமர்சித்தவரான நீலன் திருச்செல்வத்தை விடுதலைப் புலிகள் கொன்றதை நியாயப்படுத்தினார் பாலசிங்கம். அவரைக் கொன்றது நாங்கள்தான். காரணத்தைச் சொல்ல நாங்கள் தயார். கேட்க நீங்கள் தயாரா என்று என்னிடம் பட்டென்று கேட்டார் பாலசிங்கம்.

பிரபாகரனை போர் தாகம் கொண்டவர் என்று ஒருமுறை என்னிடம் வர்ணித்தார் பாலசிங்கம். அதேசமயம், பிரபாகரன் உள்பட விடுதலைப் புலிகள் தலைமை, தங்களது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்ற முயன்று வருவதாகவும் கூறினார்.

ஆண்டன் பாலசிங்கம் மிகவும் வெளிப்படையானவர். தவறுகளை ஒப்புக் கொள்வார். விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த பல தவறுகளை என்னிடம் அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளார். மிகச் சிறந்த மனிதர். அவர் மீதான மரியாதை எனக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருந்தது. எனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்று கூறியுள்ளார் சோல்ஹீம்.

tamil.oneindia.com

TAGS: