வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என பாராளுமன்ற உறுப்பினரும், அப்போதைய பாதுகாப்பு தரப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரபாகரன் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே யுத்த வெற்றியை அறிவித்தோம். இறுதி யுத்தத்தின் பின்னரும் பிரபாகரன் உயிரோடு இருக்கவில்லை. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் பொய்யான வரலாற்றை கூறுகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தமும், ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டுதலிலும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொன்சேகா கூறுகின்றார். இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு தரப்பு பேச்சாளராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சரத் பொன்சேகா என்ற நபர் ஒரு நல்ல அரசியல் வாதியோ அல்லது நல்ல இராணுவத் தளபதியோ அல்ல. அவர் எந்த நிலையிலும் விலைபோகக்கூடிய நபர். அவர் பலமான நபராகவோ மக்களின் ஆதரவை பெற்றிருந்த நபராகவோ இருந்திருந்தால் கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.
யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் இராணுவத் தளபதியாக இருந்துள்ளார். ஆனால் யுத்தத்தை முன்னெடுத்து சென்றுள்ளார் என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மாத்திரம் தலைமை தாங்கி யுத்தத்தை முடிக்கவில்லை. எமது அரசாங்கம் வழிநடத்தியது. பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச வழிநடத்தினார். மாறாக சரத் பொன்சேகாவை என்ற தனி நபர் மாத்திரம் யுத்தத்தில் நாயகனாகப் பார்க்கின்றமையை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.
சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவையாகும். அதேபோல் பாராளுமன்றத்தில் அவரின் உரையை அவதானிக்கும் போதும் அதில் முழுமையாக மஹிந்த ராஜபக்ச மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வைராக்கியத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் மாத்திரமே உள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பலப்படுத்தும் வகையில் ராஜபக்ச குடும்பம் பணம் கொடுத்ததாகவும் பசில் ராஜபக்ச புலிகளை பலப்படுத்தி செயற்பட்டார் என்று கூறுவதும் முழுமையான பொய்யாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பசில் ராஜபக்சவோ அல்லது கோத்தபாய ராஜபக்சவோ புலிகளுடன் நெருக்கத்தை பேணியிருந்தால் அப்போதே அவர் இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். நாட்டின் மீதும் இராணுவத்தின் மீதும் பற்று கொண்ட நபர் ஏன் அப்போது இந்த உண்மைகளை மறைக்க வேண்டும். அப்படியாயின் அவரும் புலிகளுக்கு உடந்தையாக செயற்பட்டிருக்க வேண்டும்.
மேலும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றசாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார். அவரின் தலைமையில் இடம்பெற்ற மிகப்பெரிய குற்றம் இதுவென்பதை என்பதை மறந்துவிட்டோ அல்லது இந்த விவகாரத்தில் அவர்மீது இருக்கும் குற்றங்களை மறைத்துவிட்டோ வேறு ஒரு வகையில் செயற்பட பார்க்கின்றனர்.
மஹிந்த, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை பழிவாங்கும் எண்ணத்தில் அவர்களை போர்க்குற்றவாளிகள் என்று சர்வதேச ரீதியில் தண்டிக்கும் முயற்சியில் அப்பாவி இராணுவத்தையும் சேர்த்து தண்டிக்கவே முயற்சிக்கின்றனர்.
மிகவும் மோசமான பயங்கரவாதிகளுடன் போரிடும் போதும் பல லட்சம் தமிழ் மக்களை வடக்கில் இருந்து காப்பாற்றும் மனிதாபிமான போராட்டத்தின் போதும் ஒரு சில தவறுகள் நடைபெறும். அதை தவிர்க்க முடியாது.
இந்த கருத்தை பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெஸ்மன் டி சில்வா தனது அறிக்கையிலும் இந்த காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இவ்வாறான சிறுசிறு காரணிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனித உரிமை மீறல்கள் நடந்தேறியது என கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இப்போது அவர் கூறும் காரணங்கள் அனைத்தினதும் பின்னணியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தமும், ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டுதலும் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, சரவதேச தரப்பு மற்றும் புலம்பெயர் புலிகளின் கட்டளைக்கு அடிபணிந்து இன்று மஹிந்த தரப்பையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் செயலை செய்து வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டம் இப்போது அரங்கேறி வருகின்றது.
மேலும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்தமையும் பொய்யான கருத்தாகும். பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியான பின்னரும் கொல்லப்பட்டது அவர் தான் என பல தடவைகள் உறுதிப்படுத்திய பின்னருமே நாம் யுத்த வெற்றியை அறிவித்தோம்.
ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகா அங்கு இருக்கவில்லை. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் யுத்த வெற்றியை தெரிவித்த பின்னரே சரத் பொன்சேகா அறிந்துகொண்டார். இவ்வாறு பல உண்மைகளை அறியாது பொய்யான காரணிகளை பாராளுமன்றத்தில் தெரிவிப்பதனால் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டு விடாது.
இப்போது உள்ள நிலையில் ரணிலின் அடிமையாகவே இவர்கள் அனைவரும் செயற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்சவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் சரத் பொன்சேகா செயற்படுகின்றார். அடிமட்ட நிலைக்கு அவர் இறங்கியுள்ளார் என்றார்.
-http://www.tamilwin.com