இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய ரசாயன குண்டு வீச்சுத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தருவோம் என்று அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறினார்.
இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்குக் நகருக்கு அருகே தாஸாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரு முறை ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் ரசாயனம் பயன்படுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
அந்தத் தாக்குதலில் 3 வயதுப் பெண் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 600 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், தாஸாவில் மீண்டும் ரசாயன குண்டுகள் கொண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெடிகுண்டுக் காயம் என்று முதலில் நம்பப்பட்ட நிலையில், மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களின் சருமங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு ரசாயன குண்டு வீச்சு நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறுகையில், ரசாயன குண்டு வீச்சு நிகழ்த்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொடுஞ்செயலுக்கு தக்க பதிலடி தருவோம் என்றார்.
கடந்த மாதம் இராக்கில் அமெரிக்க சிறப்புப் படையினர் நிகழ்த்திய வேட்டையில், ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கத் திட்டமிடுவதற்காக அமைந்த ஐ.எஸ். குழுவின் தலைவர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com