எல்லாளன் தொடக்கம் பிரபாகரன் வரை ‘தமிழன்’ வீரமுள்ளவன் என்பதை சிங்களதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது முன்னாள் இராணுவத் தளபதி அமைச்சர் சரத் பொன்சேகாவின் உரை எடுத்தியம்பியுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச்செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.
வெள்ளைக் கொடிவிவகாரத்தை விசாரிப்பதன் மூலம் சரணடைய வந்தவர்களை கொலைசெய்ய உத்தரவிட்ட சர்வாதிகாரி யார்? என்ற உண்மையை சர்வதேசம் தெரிந்துகொள்ளும் உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா ஆற்றிய உரை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே சண்.குகவரதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு போரின் உண்மை தெரியும். எனவே, அவரது உரையில் வெளியிடப்பட்டவை உண்மை என்பதை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் ஏற்றுக்கொள்வார்கள்.
போர் முடிந்த பின்னரும் பிரபாகரன் இறக்கவில்லை எனக் கூறியுள்ளமை பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
போர்க் காலத்தில் கொல்லப்படாத பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார்? சர்வதேச போர் சட்டங்களை மீறி அவரைக் கொலைசெய்ததாகவே இதனைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அத்தோடு வெள்ளைக் கொடி விவகாரமும் விசாரிக்கப்பட வேண்டும். அப்போது உண்மைகள் வெளியாகும் என்ற விடயமும் பாரியதொரு கேள்வியை முன்வைத்துள்ளது.
அதுதான் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய வந்தவர்கள் கொலைசெய்யப்பட்டார்களா? அதற்கான உத்தரவை வழங்கிய சர்வாதிகாரி யாரென்ற விடயங்களை விசாரணைகள் மூலம் உலகிற்கு எடுத்தியம்பலாம்.
சர்வதேச பங்களிப்பு ஏற்றுக்கொண்டுள்ளமை வரவேற்புக்குரியது. இதன்மூலம் பல உண்மைகள் வெளிவரும். வடபகுதி போரில் மட்டும்ல தெற்கில் இடம்பெற்ற பல கொலைகள், கடத்தல்கள் பின்னணியிலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார்.
தென்பகுதியிலேயே குற்றச்செயல்களைப் புரிந்தவர்கள் போர் இடம்பெற்ற வடக்கில் எவ்வாறு காட்டுமிராண்டித்தனமான தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளமுடியும்.
புறமுதுகு காட்டி ஓடாமல் தைரியமாக களத்திலிருந்த வீரனை சர்வதேச போர் சட்டங்களை மீறி பிடித்துக் கொலை செய்துள்ளனர் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எல்லாளன் தொடக்கம் பிரபாகரன் வரை தமிழன் ‘வீரன்’ என்பதை சிங்கள தேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தமிழனுக்குக் கிடைத்த பெருமையாகும்.
இராணுவத்திலிருந்து போருக்குப் பயந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ஷவினால் எப்படி போரை முடித்து வைக்க பங்களிப்பு செய்யமுடியும் என்ற விடயம் தொடர்பில் பெரும்பான்மை இனம் சிந்திக்க வேண்டும்.
ராஜபக்ஷ குடும்பத்தின் தில்லுமுல்லுகள், அராஜகங்கள், ஊழல் மோசடிகள் அனைத்தும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
‘தேசப்பற்று’ என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தேசவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜபக்ஷ குடும்பத்தை மக்கள் நிராகரிக்கவேண்டும்” என்று அந்த அறிக்கையில் சண்.குகவரதன் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com