வடக்கில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது! வட மாகாண முதல்வர்

vikneshvaranவடமாகாணத்தில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறிஸ் ஹர்சனுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பிலேயே விடயத்தை தாம் சுட்டிக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை 9 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், தங்கள் அரசாங்கத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு எவ் வகையான உதவிகளை வழங்கலாம். என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவர் இங்கே வந்திருந்தார்.

இந்நிலையில் வெளிநாடுகள் ஊடாக செய்யப்படும் பல்வேறு வேலைத்திட்டங்கள் மத்திய அரசாங்கம் ஊடாக செய்யப்படும் நிலையில் அவற்றில் மாகாண அரசாங்கங்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளமை தொடர்பாக நான் அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றேன். மத்திய அரசாங்கம் ஊடாக செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய அரசாங்கம் அந்த மாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுடனும் கலந்து பேச வேண்டும். மேலும் வடமாகாணத்தில் உள்ள முக்கியமான பிரச்சனை படையினர் எங்களுடைய பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருப்பதேயாகும். படையினர் மக்களுக்கு மிகச் சிறியளவிலான நன்மைகளை செய்தாலும் கூட போர் நிறைவடைந்து 6 வருடங்களின் பின்னரும் அவர்கள் இங்கே தொடர்ந்தும் தங்கியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டிய நிலையில் அது தொடர்பாக தாம் கவனம் செலுத்துவதாக கூறியிருக்கின்றார்.

மத்திய அரசாங்கம் தமது அதிகாரத்தை மாகாணத்தை மேவி பிரயோகிப்பது தொடர்பாகவும் நாம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இந்நிலையில் எமது மாகாணத்தில் ஆங்கில அறிவை மேம்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அவர் எம்மோடு பேசினார் என முதல்வர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: