முன்னாள் இராணுவத் தளபதி இப்போது பல் வேறு விடயங்களை கூறி வருகிறார். நாளுக்கு நாள் அவர் கூறுகின்ற விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
புலிகளுடனான போர் வெற்றியை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்த போது விடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தார் என்று சரத் பொன்சேகா கூறிய கருத்து மகிந்த தரப்பில் கடுமையாக உணரப்பட்டது.
தொடர்ந்து போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் அனுசரணையை பெற்றுக் கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கூறியமை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கூறப்பட்டதாக கருதப்பட்டது.
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தரப்பில் எவரும் பங்கேற்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா திடீரென, சர்வதேச நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் பங்கேற்க வைக்கலாம் என்று கூறியமை ஒரு வித்தியாசமான கருத்து என்பது ஏற்புடையதே.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடிய ஒருவர்; விடுதலைப் புலிகளுடனான போரில் இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் இப்படியாக மாற்றமுற்றது ஏன்? என்ற கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர் பழிவாங்கப்பட்டமையே காரணம் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில் மகிந்த ராஜபக்வின் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகா சிறையில் இருந்த விடுதலை பெற்ற பின்னரும் தமிழ் மக்களுக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
போர்க்களத்தில் இருந்த இராணுவத்தை காப்பாற்றுவதிலேயே சரத் பொன்சேகாவின் முழுக் கவனமும் இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் ஆதரித்திருந்தனர். இருந்தும் அந்த நன்றிக்கடனும் சரத் பொன்சேகாவிடம் தெரிந்ததில்லை.
ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் இழந்த பதவிகளை மீளவும் வழங்கி பீல்ட் மார்ஷல் என்ற விசேட தகைமையையும் கொடுத்த பின்னரும் தமிழ் மக்கள் தொடர்பில் சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு இறுக்கமாகவே இருந்தது.
இப்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுள்ள சரத் பொன்சேகாவிடம் ஒரு புதிய மாற்றம் தெரிகிறது. இந்த மாற்றத்தில் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தார், போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் போது சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்களாகும்.
இவை ஒருபுறம் இருக்க சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் நாளுக்கு நாள் அதிர்ச்சித் தகவல்களாக இருப்பது இங்கு நோக்குதற்குரியது.
படைச் சிப்பாய் ஒருவரை காட்டில் வைத்து கோத்தபாய ராஜபக்ச உதைந்து கொன்றார் என சரத் பொன்சேகா அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இராணுவச் சிப்பாயைக் காலால் உதைந்து கோத்தபாய ராஜபக்ச கொன்றார் என்ற சரத் பொன்சேகாவின் தகவல் சாதாரணமானதல்ல.
ஏனெனில் இத் தகவல் விசாரணைக்கு உட்படும் போது அவ்வாறு கொலையுண்ட சிப்பாய் யார்? அந்தச் சம்பவம் எந்தக் காட்டில் நடந்தது? சாட்சியங்கள் யாவர்? என்ற கேள்விகள் ஏற்படும் போது கொலையுண்டவர் அடையாளம் காணப்படுவார்.
இஃது தென்பகுதி முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தரப்பிலும் சலசலப்பு உருவாகும். இதற்கு அப்பால் இக்கொலை தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடுதல் என்ற பணியை அரசாங்கம் செய்யும் போது கோத்தபாய ராஜபக்ச கைதாகும் நிலைமை ஏற்படும்.
ஆக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆரம்பித்துள்ள இன்றொரு தகவல் என்ற நிகழ்ச்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பை கடுமையாகப் பாதிக்கும் என்பதும் இந்த நிகழ்ச்சி மகிந்த ராஜபக்சவின் அரச எதிர்ப்பை மடக்கிப் போடும் என்பதும் சர்வ நிச்சயம்.
-http://www.tamilwin.com