போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவாரா சரத் பொன்சேகா?

sarath_09பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதற்காக பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டாரோ அதற்கான பணிகளை அவர் செவ்வனே செய்யத் தொடங்கியிருக்கிறார்.

கடந்த 10ம் திகதி பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய உரை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போர் தொடர்பாக சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்கள் பல, பலருக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

ஒரு பக்கத்தில் இதனை ஒரு போர்க்குற்ற சாட்சியமாக எடுத்துக்கொண்டு விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறது. இன்னொரு பக்கத்தில் தம்மை போர்க்குற்றவாளிகளாகச் சிக்க வைப்பதற்கே இந்த முயற்சி என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

ஆனால் இரண்டுமே சரியான பார்வைகளா? என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சரத் பொன்சேகாவின் உரையில் பழி வாங்கும் உணர்வே அதீதமாகத் தென்பட்டாலும், போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஓர்மத்தைத் தான் அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் தனிப்பட்ட சில சம்பவங்கள் நடந்திருந்தால் அதுபற்றி சர்வதேச உதவியுடன் விசாரிக்க வேண்டும் என்பதும் தான் அவரது கோரிக்கையாக இருக்கிறது.

சர்வதேச விசாரணையை அவர் முன்னிறுத்துவதற்கு முக்கிய காரணம், ராஜபக்ச குடும்பத்தினரை கூண்டில் ஏற்றுவதல்ல. போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதுதான் அவரது முதல் தெரிவாக இருக்கிறது.

தான் தலைமையேற்ற இராணுவம் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்று நிரூபிக்கவே அவர் முனைகிறார். அத்தகைய நிறுவல் நம்பகமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சரத் பொன்சேகா சர்வதேச பங்களிப்புடனான விசாரணையை வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த இடத்தில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடு இதுதான்.

மகிந்த தரப்பு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை என்று ஒட்டுமொத்த அரசியல் இராணுவத் தலைமைத்துவங்களைப் பாதுகாக்க முனைகிறது. சரத் பொன்சேகாவோ தனது தலைமையில் இராணுவம் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்று பாதுகாத்துக் கொள்ள  முனைகிறார்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு தரப்புகளின் நிலைப்பாடுகளுக்குமிடையில் பெரிய வேறுபாடுகளைக் காணமுடியாது. ஏனென்றால் போர்க்குற்றங்கள் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டனர் என்ற தனது குற்றச்சாட்டுக்களை தமிழர் தரப்பு இராணுவத் தலைமைக்கு எதிரானது, அரசியல் தலைமைக்கு எதிரானது என்று பிரித்துப் பார்க்கத் தயாராக இல்லை.

அதாவது சரத் பொன்சேகா போரை நெறிமுறைகளுக்கு அமைய நடத்தினார் என்று கூறுவதற்கோ, குறிப்பிட்ட சில அதிகாரிகளை வைத்துக் கொண்டு அப்போதைய அரசியல் தலைமை தான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்று கூறுவதற்கோ தமிழர் தரப்பு தயாராக இல்லை.

தமிழர்களுக்கு எதிராக அப்போது தொடரப்பட்ட போரில் அரசியல் இராணுவத் தலைமைகள் ஒன்றுபட்டு நின்றுதான் வழிநடத்தியிருந்தன. இப்போது ஆளாளுக்கு முரண்பட்டுக் கொண்டாலும், போரை நடத்திய போது இவர்கள் ஒன்றுபட்டே நின்றனர்.

போரில் வெற்றி பெற்றவுடன் அலரி மாளிகையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவோ, பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவோ அந்தக் கேக்கை வெட்டவில்லை. போருக்குத் தலைமையேற்ற சரத் பொன்சேகா தான் வெட்டினார்.

எனவே போர்க்குற்ற விவகாரங்களைப் பொறுத்தவரையில், இறுதிப்போருக்கு தலைமை தாங்கியவர்களில் கூடுதல் பொறுப்புடையவர்கள், குறைந்த பொறுப்புடையவர்கள் என்று யாரையும் சுட்டிக்காட்ட முடியாது.

ஆனால் இப்போது நடக்கின்ற இழுபறி ஒருவர் மீது மற்றவர் பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளும் முயற்சி தான் நடக்கின்றது. போரில், சரத் பொன்சேகாவுக்கு இருந்த பங்களிப்பை கோத்தபாய ராஜபக்சவோ, மகிந்த ராஜபக்சவோ இப்போது குறைத்துக் கூறுகின்றனர். அவர் இல்லாவிட்டாலும் போரில் வெற்றி கிடைத்திருக்கும் என்கின்றனர்.

ஆனால் சரத் பொன்சேகாவை நம்பித்தான் மகிந்த ராஜபக்ச போரைத் தொடங்கினாரே தவிர, கோத்தபாய ராஜபக்சவை நம்பியல்ல.

கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் முன்னர் ஒரு அதிகாரியாக பணியாற்றியிருந்த போதிலும், அவர் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக இருக்கவில்லை.

கோத்தபாய ராஜபக்சவை நம்பி போர் தொடங்கப்பட்டிருந்தால் அதன் திசை மாறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

சரத் பொன்சேகா இல்லாவிட்டாலும் வேறு ஒரு அதிகாரியை வைத்து தாங்கள் போரில் வெற்றியீட்டியிருப்போம் என்று கோத்தபாய ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார்.

அவ்வாறாயின் ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் இருந்த சரத் பொன்சேகாவை அவர்கள் ஏன் சேவை நீடிப்பு வழங்கி இராணுவத் தளபதியாக நியமித்திருக்க வேண்டும்? இராணுவத்தில் இருந்த அதிகாரிகளில் எவரையேனும் அந்தப் பதவிக்கு  நியமித்திருக்கலாமே.

அதேவேளை போரை வைத்து ராஜபக்சவினர் பிழைப்பு நடத்தியுள்ளதாக சரத் பொன்சேகா இன்று குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், ராஜபக்சவின் அரசியல் தலைமைத்துவத்தினால் தான் போரில் வெற்றியீட்ட முடிந்தது என்று அவர் முன்னர் கூறியதையும் மறந்துவிட முடியாது.

இறுதிப்போர் என்பது இந்த மூன்று பேரையும் சுற்றியதாகவே இருந்தது. மூவரும் தான் தலைமை தாங்கியிருந்தனர். எனவே போர்க்குற்றங்களுக்குப் பதிலளிக்கும் கடப்பாடும் மூவருக்கும் தான் இருக்கிறது.

போரில் சரத் பொன்சேகாவையும் மீறி பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றும் தெரிகிறது. சரத் பொன்சேகா இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய ஒரு அதிகாரி மட்டுமே தவிர,  அவருக்கே தெரியாத பல இரகசியங்கள் இருக்கின்றன என்று இப்போது மகிந்த ராஜபக்சவே கூறியிருப்பது முக்கியமானதொரு விடயம்.

இதனைத்தான் சரத் பொன்சேகா தனது குற்றச்சாட்டாக முன்வைத்திருக்கிறார்.

தம்மை போர்க்குற்றவாளியாக கூண்டில் நிறுத்த முயற்சிகள் நடப்பதாக கூறும் மகிந்த ராஜபக்ச, தனது வாயினால் தான் சரத் பொன்சேகாவுக்கும் தெரியாத இரகசியங்கள் இருந்தன என்று கூறியிருக்கிறார்.

போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிக்குத் தெரியாமல் இருந்த இரகசியங்கள் என்ன? அவ்வாறான இரகசியம் எதற்கு பேணப்பட்டது? இவையெல்லாம் இறுதிப்போர் குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியிருக்கின்றன.

வெள்ளைக்கொடி விவகாரம் உள்ளிட்ட சில சம்பவங்கள் தனக்குத் தெரியாமல் நடந்திருப்பதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கூறியிருந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் தான் மகிந்த ராஜபக்ச இரகசியங்கள் பலவும் இருந்ததாகக் கூறியிருக்கிறார். அவ்வாறாயின் போரில் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது.

போரின் போது இராணுவத் தளபதிக்குக் கட்டுப்படாத அவரது கட்டளைக்கு அப்பால் செயற்படும் அணிகள் அல்லது நபர்கள் இருந்திருக்கின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றிய தகவலை இராணுவத் தளபதி அறிய முன்னரே தமக்கு ஆதாரத்துடன் தகவல் கிடைத்து விட்டதாகவும், அதனால் தான் பாராளுமன்றத்தில் அறிவித்ததாகவும் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

உண்மையில் போர் முடிந்து விட்டதாக மகிந்த ராஜபக்ச 2009 மே 19ம் திகதி காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் அறிவித்த பின்னர் தான்  பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகாவுக்கு 53வது டிவிஷன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மூலம் தகவல் கிடைத்தது.

அதன் பின்னரே இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அந்த தகவலை மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்ட தகவல் தமக்கு முன்கூட்டியே கிடைத்து விட்டதாக மகிந்த ராஜபக்ச இப்போது கூறுகிறார். அப்படியானால் பாராளுமன்றத்தில் அதனை அவர் ஏன் அறிவிக்கவில்லை? என்ற கேள்வியும் இருக்கிறது.

சரத் பொன்சேகா வாயைத் திறந்ததால் பல கோணங்களில் கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. இந்தச் சர்ச்சைகள் அனைத்திலும் பழி வாங்கும் உணர்வுகள் பிரதிபலிப்பது தெரிகிறது.

சரத் பொன்சேகாவை தாம் ஆட்சியில் இருந்த போது பழி வாங்கியதை பசில் ராஜபக்சவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது சரத் பொன்சேகாவின் முறை வந்திருக்கிறது. அவர் அதனை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

இதில் இறுதிப்போர் பற்றிய பல தகவல்கள் வெளிவருகின்றன. சான்றுகள் கிடைக்கின்றன.

ஆனால் அதேவேளை, சரத் பொன்சேகாவோ, மகிந்த ராஜபக்சவோ வெளியிடுகின்ற தகவல்கள் அனைத்தும் உண்மையானவை, சரியானவை என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இறுதிப்போர் மர்ம முடிச்சுகள் பலவற்றைக் கொண்டது. அவற்றில் சிலவற்றைத் தான் அவர்கள் அவிழ்க்கப் பார்க்கிறார்கள்.

என்றாலும் போர்க்குற்றங்கள் குறித்த முழுமையான இரகசியங்களை இரண்டு தரப்புமே வெளியிடப் போவதில்லை. ஏனென்றால் இது ஒருவர், இருவர் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல.

அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் என்பதால், தமது தலைக்குப் பாதிப்பு வராத வகையில் தான் முடிச்சுகளை அவிழ்ப்பார்களே தவிர, ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் செல்ல முடியாது.

இப்படியான நிலையில் மகிந்த ராஜபக்ச – சரத் பொன்சேகா மோதல் இரகசியங்கள் எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வரும் என்று தமிழர் தரப்பு எதிர்பார்த்தால், இலவு காத்த கிளியின் நிலைதான் ஏற்படும்.

சுபத்ரா

-http://www.tamilwin.com

TAGS: